ஶ்ரீ.சு.கட்சி தலைவர் பதவியில் இருந்து மைத்திரியை உடன் அகற்றுமாறு சந்திரிக்கா கோரிக்கை!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அண்மையில் ‘தி இந்து’ பத்திரிகைக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய நேர்காணல் தொடர்பில் இந்த கடிதத்தில் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நேர்காணலில் மைத்திரி கூறிய விடயங்களை இதன்போது சந்திரிகா மறுத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மைத்திரிபால சிறிசேன ‘தி இந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து பணியாற்ற தயாரா? என்று கேட்கப்பட்டதற்கு,
சிறிசேன கூறியதாவது: “அவர் இனி கட்சியில் இல்லை. நவம்பர் 2019 ஜனாதிபதித் தேர்தலில், அவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தார், அதனால் அவர் கட்சியை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
சுகததாச ஸ்டேடியத்தில் அவர் நடத்திய பேரணியில் எங்கள் கட்சியிலிருந்து பிரிந்த உறுப்பினர்களை அவர் வழிநடத்தினார், அது எங்கள் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.
இதை மறுத்த சந்திரிகா “நான் இராஜினாமா செய்யவில்லை மேலும் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படவில்லை. எனவே, சிறிசேனவின் கூற்று சரியானதல்ல” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.