மாஸ்டர் – சினிமா விமர்சனம்
நடிப்பு – விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்
இயக்கம் – லோகேஷ் கனகராஜ்
இசை – அனிருத்
வெளியான தேதி – 13 ஜனவரி 2021
நேரம் – 2 மணி நேரம் 58 நிமிடம்
ரேட்டிங் – 2.5/5
ஒரு கதைக்காக நாயகனா அல்லது நாயகனுக்காக கதையா என பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்குத்தான் ஒரு படம் இருக்க வேண்டும். அந்தப் படத்தில் இவர் நடித்திருந்தால் ஒன்றாக இருக்கும், இந்தப் படத்தில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ஒரு படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் பேசக் கூடாது.
ஆனால், இந்தப் படத்தைப் பார்த்து அப்படிப் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாநகரம், கைதி என இதற்கு முன் தான் இயக்கிய இரண்டு படங்களிலும் கதையை எழுதி முடித்துவிட்டுத்தான் அதற்குப் பொருத்தமான ஹீரோக்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருப்பார் என்பது அந்தப் படங்களைப் பார்த்தாலே புரிந்திருக்கும்.
இந்தப் படத்தில், விஜய், விஜய் சேதுபதி என இரண்டு முன்னணி ஹீரோக்களை முடிவு செய்துவிட்டு அதற்குப் பிறகு அவர்களுக்காக அவசரமாக ஒரு கதையை எழுதி இந்தப் படத்தை எடுத்தது போல் இருக்கிறது.
தனியார் கல்லூரியில் புரொபசர் ஆக இருக்கும் விஜய் மீது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவ்வளவு பேரன்பு இருக்கிறது. விஜய் மீது மாணவர்கள் அவ்வளவு பேரன்பாக இருப்பது மற்ற புரொபசர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்நிலையில் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடக்கக் காரணமாக இருந்த விஜய், அதனால் ஏற்படும் பிரச்சினையில் கல்லூரியை விட்டு விலகுகிறார். நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்கிறார். அங்குள்ள மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி தன் அடியாள் போல செயல்படுத்திக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களை விஜய் திருத்த முயல்கிறார். அதனால், விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கும் மோதல் உருவாக, அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
விஜய், விஜய் சேதுபதி இருவருக்குமான படமே அல்ல இது. தன் எதிரியை விரட்டி அடித்து துவம்சம் செய்யும் ஒரு மாஸ் ஹீரேவாக விஜய் உயர்ந்து பல வருடங்களாகிவிட்டது. இந்தப் படத்தில் தன் எதிரி யார் என்றே தெரியாமல் அவரால் மாஸ்டர் ஆக மாஸ் காட்டக் கூட முடியவில்லை. மற்றவர்கள் கொடுக்கும் பில்ட்-அப் மட்டும்தான் அவருக்கு மாஸ்டர் ஆக மாஸ் காட்ட உதவுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே சில காட்சிகளில் தன் ஸ்டைலில் மாஸ் காட்டுகிறார் விஜய்.
கல்லூரி பேராசியராக இருந்தாலும் அடிக்கடி குடித்துக் கொண்டே இருக்கிறார் விஜய். சமயங்களில் கல்லூரிக்கும் தள்ளாடிக் கொண்டே தான் வருகிறார். ஆனால், அவரை மாணவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை சொல்லவேயில்லை. போகிற போக்கில் வசனத்தில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். விஜய் நாகர்கோவில் சீர்த்திருத்தப் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் கதையே ஆரம்பமாகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவரை இரண்டு சிறுவர்களின் கொலை மாற்றிவிடுகிறது. அதன்பின் அந்த பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துவதே அவரின் வேலையாகிவிடுகிறது. வழக்கமான விஜய்யை இரண்டு பாடல் காட்சிகளில் மட்டும்தான் பார்க்க முடிகிறது.
பேட்ட படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தையே மீண்டும் நினைவுபடுத்துகிறார் விஜய் சேதுபதி. வில்லத்தனம் செய்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. நெகட்டிவ்வான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் பற்றிய போஸ்டர்களில் விஜய்யும், விஜய் சேதுபதியும் எதிரும் புதிருமாக முறைத்துக் கொண்டு நிற்பது போலெல்லாம் காட்டினார்கள். ஆனால், கிளைமாக்சில் மட்டுமே இருவரும் மோதிக் கொள்கிறார்கள். அதற்கு முன்பு பார்த்துக் கொள்வது கூட இல்லை.
படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன். பெரிய வேலை ஒன்றுமில்லை. பல தமிழ்ப் படங்களில் பார்த்ததைப் போல நாயகனுக்கு கொஞ்சம் உதவி செய்யும் கதாபாத்திரம், அப்பாவி மாணவர்ளைக் காப்பற்றத் துடிக்கும் ஒரு சமூக சேவகி. விஜய்யுடன் காதல் காட்சி கூட இல்லை, அவன் கண்ணப் பார்த்தாக்கா… என பின்னணியில் யுவன் பாட இவர் மட்டுமே காதலித்துக் கொள்கிறார்.
ஆண்ட்ரியாவெல்லாம் இந்தப் படத்தில் எதற்கு நடிக்க சம்மதித்தோம் என படத்தைப் பார்த்தபின் யோசிப்பார். மற்ற கதாபாத்திரங்களில் சூப்பர் சிங்கர் பூவையார் மட்டுமே கொஞ்சம் கவனிக்க வைக்கிறார். சாந்தனு, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் நாசர் இப்படி பலர் ஆங்காங்கே ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.
அனிருத் இசையில் பாடல்களை தனியாகக் கேட்பது ரசிக்க வைத்தது. படத்துடன் பார்க்கும் போது பொருத்தமில்லாத இடங்களில் வந்து போகிறது. ஒரு ராவான படமாகக் காட்ட ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் முயற்சி செய்துள்ளார். கல்லூரி, சீர்திருத்தப்பள்ளி என இரண்டே இரண்டு இடங்களில் முக்கவால்வாசி படம் நகர்கிறது. வேறு இடங்களைப் படத்தில் அதிகம் காட்டவேயில்லை.
விஜய் ரசிகர்கள் வேண்டுமானால் படத்தை தங்களுக்குத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம். மாநகரம், கைதி என தரமான படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர் வழியில் பயணிப்பதே நல்லது. பரீட்சார்த்த முயற்சிகளில் விஜய்யும் இறங்குவதைத் தவிர்க்கலாம்.