“கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தது அடுத்த ஐந்து மாதங்களுக்குத் தொற்று ஏற்படாது என பிரிட்டன் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படாதவர்களுடன் ஒப்பிட்டால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 83 சதவீதம் அளவிற்கு மீண்டும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும் சிலருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு, அது பிறருக்கும் பரவலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் தங்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் இல்லையென்றாலும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
`உயிர்களை காப்பாற்றும்`
இந்த ஆய்வை முன்னெடுத்த பேராசிரியர் சூசன் ஹாப்கின்ஸ், சிலரிடம் எதிர்பார்த்ததை விட கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இருப்பினும் அது நீண்ட காலம் என்று கூற முடியாது என்கிறார்.
கவலை கொள்ளக்கூடிய ஒரு விஷயம், கொரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதன் தீவிரம் அதிகமாக இருந்தது. அதில் சிலருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை ஆனால் அடுத்தவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்திருந்தது என்கிறார் சூசன்.
“இதன் மூலம் உங்களுக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டு விட்டது என்றும், நீங்கள் முழு பாதுகாப்புடன் உள்ளீர்கள் என்றும் நம்பினால் அதற்கு மீண்டும் உறுதியளிக்க முடியாது. அதாவது உங்களுக்கு தீவிர தொற்று ஏற்படும் சூழல் குறைவாக இருந்தாலும், ஆபத்து முழுமையாக நீங்கிவிடவில்லை என்றே கூறலாம். மேலும் உங்களுக்கு தொற்று ஏற்பட்டு நீங்கள் அதை பிறருக்கு பரப்பும் பாதிப்பும் உள்ளது.” என சூசன் மேலும் கூறுகிறார்.
– BBC