நினைவுத்தூபி இடித்தழிப்பு:ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வலுவான பிரேரணை : பிரிட்டன் தொழிற்கட்சி
“யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்கு எதிராக வலுவான பிரேரணையின் அவசியத்தை எடுத்தியம்புகின்றது.”
– இவ்வாறு பிரிட்டன் தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் வலியுறுத்தியுள்ளார்.
அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் உட்பட மனித குலத்துக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பாதுகாக்கும் வகையில் பிரிட்டன் அரசு ஜெனிவாவில் செயற்பட வேண்டும்.
இலங்கை விடயத்தில் புதிய பிரேரணை ஒன்றுக்கான உறுதிப்பாட்டை பிரிட்டன் அரசு உறுதிசெய்ய வேண்டும்.
அந்தப் பிரேரணையில் இலங்கையைக் கண்காணிக்கும் அலுவலகத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நிறுவுதல் என்ற விடயம் அமையப்பெற்று விசேட பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும்” – என்றார்.