நினைவேந்தல் உரிமை மறுப்பு: மாபெரும் மனித உரிமை மீறல்!- ரணில்
“போரில் இறந்தவர்களைத் தூபிகள் அமைத்து அல்லது நிகழ்வுகள் நடத்தி நினைவுகூர்வது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அந்த உரிமைக்கு அனுமதி மறுப்பதற்கும் – அதைத் தட்டிப் பறிப்பதற்கும் எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அடிப்படை உரிமையை மறுப்பது மாபெரும் மனித உரிமை மீறலாகும்.”
– இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இறுதிப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போரில் உயிரிழந்த தமது உறவுகளைப் பகிரங்கமாக நினைவுகூரக் கடந்த நல்லாட்சியில் சகல இன மக்களுக்கும் நாம் அனுமதி வழங்கியிருந்தோம். இந்தநிலையில், குறிப்பிட்ட ஓர் இனத்தைக் குறிவைத்து இந்த நினைவேந்தல் உரிமையை இந்த அரசு தட்டிப் பறிப்பது பெரும் மனித உரிமை மீறலாகும். இது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். அத்துடன் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
நினைவேந்தல் உரிமையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இருக்கவே கூடாது. இந்தப் பாகுபாடு நாட்டின் நல்லிணக்கத்துக்குப் பெரும் குந்தகம் விளைவிக்கும்.
இனவெறி, மத வெறி மற்றும் போர் வெறி கொண்டவர்கள் ஆட்சிப்பீடத்தில் இருந்தால் அது நாட்டுக்கே சாபக்கேடு” – என்றார்.