மஹிந்தவின் பொங்கல் விழா திடீரென இரத்து!
“அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நடத்தப்பட இருந்த தேசிய பொங்கல் அரச விழா இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. எனக்கும் அழைப்பு இருந்தது. இரத்தானமைக்கான அதிகாரபூர்வ காரணம் தெரியவில்லை.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது ‘பேஸ்புக்’ பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“உண்மையில் தேசிய பொங்கல் விழா இரத்தமைக்கு கொரோனா என்ற நியாயமான காரணமாக இருக்கலாம். அதில் ஏதும் தவறு அல்லது பிரச்சினை இல்லை.
நான் பதவியில் இருக்கும்போது இயன்றவரை இத்தகைய மத விழாக்களை சர்வமத பங்களிப்புடன் செய்தேன். அப்படி நடத்தி மனதில் நின்ற ஒரு எளிமையான பொங்கல் விழா படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன்.
நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பல காரியங்களைச் செய்தோம். பலவற்றை செய்ய முடியவில்லை. உண்மையில் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் இருவரிடத்திலும் பலமுறை நான் கலந்துரையாடியபோது, அவர்கள் பலவற்றை செய்ய உண்மையாகவே விரும்பிய கணங்கள் எனக்கு உண்மையிலேயே தெரியும். எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை நேர்மையுடன் நான் சொல்ல வேண்டும்.
ஆனால், எதிரணியில் இருந்துகொண்டு, கொஞ்சம்கூட நியாயமே இல்லாமல், சிங்கள பெளத்த மக்களைத் தூண்டி விட்டுக்கொண்டு இருந்த, இன்றைய இந்த ஆட்சியாளர், அன்றைய எதிரணி, இந்த கும்பலைப் பார்த்து அவர்கள் இருவரும் அரசியல்ரீதியாக பயந்தார்கள்.
இவர்களை எதிர்த்து உறுதியாக நிற்கும் மனோதிடம் (வில்பவர்) அவர்கள் இருவரிடமும் இருக்கவில்லை. மனோதிடம் (வில்பவர்) இருந்த மனோ கணேசன் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை..! இந்த இனவாத கும்பல்தான் இந்நாட்டின் சாபம்..!
எது எப்படி இருந்தாலும், இந்த ஆட்சி வந்த புதிதில், கொஞ்சம் மயங்கித்தான் போய், எமது நல்லாட்சியை திட்டித்தீர்த்த தமிழ், முஸ்லிம் நண்பர்களையும் எனக்கு தெரியும்.
ஆனால், இன்று எவ்வளவு குறைபாடுகள் இருந்திருந்தாலும், எமது நல்லாட்சியின் மகிமை பலருக்கு நெற்றிப்பொட்டில் அடித்தால்போல் புரிகின்றது” – என்றுள்ளது.