ராஜபக்சக்களின் சகாவான ஜோன்ஸ்டனும் விடுதலை!
ராஜபக்சக்களின் சகாவான ஜோன்ஸ்டனும் விடுதலை!
வழக்கு சட்டத்துக்கு முரணானது;
கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு
ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு சட்டத்துக்கு முரணானது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
2015 ஆண்டுக்கு முன்னரான ராஜபக்ச அரசின்போது வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் 153 ஊழியர்களைப் பணி நீக்கி அவர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதன் ஊடாக, அரசுக்கு நான்கரை கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று அவர் மீது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
கடந்த நல்லாட்சி அரசின்போது, இந்த வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள விதம் சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடிப்படை எதிர்ப்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், இதற்கு எதிராக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரின் எதிர்ப்பு மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு சட்டத்துக்கு முரணானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
இதன்படி குறித்த வழக்கை இதற்கு மேல் தொடர முடியாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.