‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ ஒரு பார்வை : ஜோ
‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ என்ற சிறுகதை தொகுப்பு சுதர்சன் புக்ஸ் பதிப்பகம் ஊடாக 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் கனடாவில் வசிக்கும் இலங்கை பருத்தித்துறையில் கீழைச் புலெலியால் என்னும் கிராமத்தை சேர்ந்த ராஜாஜி ராஜகோபாலன் ஆவார்.
தன்னுடைய நினைவையும் அனுபவங்களையும் கொண்டு 15 கதைகளை அழகான ஒரு சரமாக கொருத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை சொல்பவை.
அப்படியாக ஈழத்திலிருந்து வெளிநாடுகளில் குடிபெயர்ந்த ஊர் நினைவுகளுடன் வாழும் உள்ளத்தால் ஈழ நினைவும் தன்னுடைய மக்களின் நினைவுகள் அடங்கிய கதைகள் ஆகும் இவை. கதைகளில் சிலவை ஒரு வாழ்க்கை சரிதை போன்ற உணர்வை தருகிறது. சில கதைகள் மனிதனின் அதி உன்னத குண நலன்களையும் சில கதைகள் மனிதனின் வீழ்ச்சியேயும் சில கதைகள் மனிதனின் இயலாமையும் சில கதைகளோ மனிதன் சூழலின் இரையாகும் கைதியாக சிறைப்பட்டுப் போவதையும் கண்டு உணரலாம்.
முதல் கதையில் பவானியை தேடி வரும் கண்ணன், பவானியின் மகள் தற்போது பதின்ம வயதை எட்டியுள்ள விவரம் தெரிந்த பெண். தன் பள்ளிக் காதலி பவானி திருமணம் முடிந்து தன் கணவரை இழந்து தனிமையில் மகளோடு வாழ்ந்து வரும் வேளையில், இளைமையில் தன் இதயத்தில் குடிபுகுந்தவளை, வாழ்க்கையில் ஓய்ந்து இருக்கையிலும் பரிவான காதலால் அணைக்க வருகிறார். பவானிக்கு தன் மகள் இருக்க, தனக்கு கணவர் தேடுவது சரியோ என நினைத்து ஒதுங்க பவானியின் மகள் ஸ்ருதியின் முயறியால் தகப்பனாக பவானி வாழ்க்கைக்குள் புகிர்கிறார்.
சூழலால், தாயின் வற்புறுத்தல் உடலை விற்று பிழைக்க வேண்டி வந்த பெண் வாழ்க்கையில் முதன்முதலாக தனக்கானவனே தானே தேர்ந்தெடுத்து அவனுடன் போய் வீடு திரும்பும் போதுள்ள மனமகிழ்ச்சியை சொல்லும் கதையிது. வாழ்க்கை ஓட்டத்தில் மகள் மகிழ்ச்சியாக இருப்பதே தாயே அச்சுறுத்தலாக பார்ப்பதும் தாய்மையில் புகுந்துள்ள மாயத்தையும் எடுத்து சொல்ல தயங்கவில்லை எழுத்தாளர்.
நாகரீகவும் மனித மன மாற்றவும் தமிழ் மருத்துவர் மயில்வாகனத்தைக் கூட விட்டுவைக்கவில்லை என்கிறது அடுத்த கதை. வறுமையில் வாழும் மருத்துவர் வாழ்க்கையும் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த கதை தான் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த போது கண்ட பானுமதியை மனதால் சுமப்பதும் நினைப்பதும் அவள் உணர்வோடு வாழ்ந்து வரும் மனிதனின் கதை இது. அடுத்த கதை தேவன் தன் முன்னாள் காதலியை சந்திக்கிறார். அவர்கள் உறவு திருமணத்தில் முடியாவிடிலும் தேவனின் நீட்சியாக தேவனின் மகன் நகுலனுக்கு தாயாக இருப்பதை எண்ணி நித்தியா பூரிப்பதும் உண்மையான காதல்கள் தடைகளை மீறி தொடர்வதை காணலாம். அடுத்த கதையிலோ பிள்ளைகளுக்கு தங்கள் வீடு மேல் இருக்க வேண்டிய கடமைகளை பற்றி சொல்கிறது. வெளிநாட்டில் இருக்கும் தயாளன் தன் புது மனைவி லாவண்யாவுடன் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வருகிறார். அங்கு திருமணத்திற்கு காத்து இருக்கும் தன் சகோதரி, அப்பா, அம்மா தயாளன் செய்யப்போகும் உதவியை எதிர்பார்க்கும் சூழலில் உள்ளனர். இருந்தாலும் மகன் மேல் தங்கள் தேவையை திணிக்கவும் இல்லை. தன் நிலையை சுட்டிக்காட்டி மகன் தன் கடமையை தட்டிக்கழிக்க நினைக்க, மருமகள் அங்கு பொறுப்பான மகனாக நின்று கதைப்பது குடும்பத்திற்கு பெரும் ஆறுதலும் நிம்மதியுமாக உள்ளது.
தன் மகனை கொலை செய்ய வேண்டி வந்த சிவனடியார் என்ற தந்தையின் இயலாமையை சொல்லும் கதையிது. இனி மருத்துவத்தால் சுகப்படுத்த வாய்ப்பு இல்லை என்ற நிலையில் மகனை தன் கையால் கொல்லும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார் பாசமிகு தந்தை. நோய் படுக்கையிலுள்ள மகனின் தகப்பன் மனநிலையை, சோகத்தை கதையாக வடித்துள்ளார். இந்த தொகுப்பின் மனதை விடாது திரத்திய கதைகளில் ஒன்று இது.
ஆதலால் காமம் செய்வீர் என்ற கதையில் ஒரு கல்லூரி மாணவன் தனது காதலியை உடலால் திருப்திப் படுத்த இயலவில்லை என்ற காரணத்தால் தற்கொலைக்கு முயல்வதும், நண்பனும் காதலியுமாக காப்பாற்றுவதுமே கதை. நவீன தலைமுறையின் செக்ஸ் சார்ந்த அறியாமையும் இயலாமையும் ஒரு புதுபார்வையில் சொல்லப்பட்டக் கதை.
மஞ்சு அக்கா கணவர் சிவபாலன் மரணவும், அக்கா நிலையும் அறிந்து வருந்தும் கதாநாயகன். தன் மனைவிக்கு கொடுக்கும் அன்பில் குறைவைக்கக்கூடாது மனைவியை மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் மனைவியிடம் சரணடைவதுடன் கதை முடிகிறது.
”அந்த ஒருவனை தேடி” என்ற கதையில் 31 வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லையே இனி 45 வயது மனிதன் தான் கிடைப்பாரா என்று மனம் வருந்தி இருக்கும் வேளையில் 29 வயது மனிதரை சந்திக்கிறார். 29 வயது ஆள் தன்னை விட 13 வயது இளம் பெண்ணை மணம் முடிக்க கிட்டிய வாய்ப்பை புறம் தள்ளியவர் என்றும் அந்த பெண்ணுக்கு அடுத்த வருடமே மணமாக மகிழ்ச்சியும் பார்த்ததாக கதை செல்கிறது. 27 வயது மனிதர் பெண் பார்க்க சென்ற போது அப்பெண்ணுக்கு 14 வயது இருந்திருக்க வேண்டும. அடுத்த வருடம் திருமணம் என்றால் 15 வயதில் பாலிய விவாகம் நடந்துள்ளது ஈழத்தில் என்ற துயர் மிகு சமூக குற்றவும் தெரிகிறது.
சுபத்திரா என்ற பெண்ணின் வன்மமான குணவும் தன் அக்காவின் கணரான முகுந்தனை அடைய ஆசைப்படுவதும் கடைசியில் திருந்துவதுமாக கதை முடிகிறது. நாடகத்தனமையுடன் கதையை நகத்திய விதம் சுவாரசியம். சுபத்திர அடுத்து என்ன செய்ய போகிறாள் என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்திருப்பதும் கதைக்கு வலு சேர்க்கிறது.
கடவுள் பெயரால் வரும், ஏஜன்றுடன் கணவர் கதாப்பாத்திரம் கேட்கும் கேள்வியும் பெண்கள் கண் மூடிக்கொண்டு இத்தகைய ஏஜன்றுகளை ஏற்றுக்கொள்ளும் சூழலை சொல்லும் கதை இது. சமூகத்தில் கடவுள் பெயரால் நிலவும் சில சூழல்களை கேள்வி எழுப்பியுள்ளது சிந்திக்கவைக்கிறது.
கனடாவில் வசித்தாலும் ஜாதகம் பார்ப்பது அதனால் திருமணம் தள்ளிப்போவது தன் துணையை தேடும் வலு இல்லாது தமிழ் குழந்தைகளை வளர்ப்பது கல்யாண வயது வந்ததும், பெண் பார்க்கும் படலம், அதன் சுற்றியுள்ள நிகழ்வுகள் என்று கனடாவிலும் தமிழ் மனநிலையுடன் வாழும் சூழலை புரிந்து கொள்ள இயல்கிறது. நவீன சிந்தனையுடன் செந்தில் என்ற தம்பி கதாப்பாத்திரத்துடன் கதை நகர்கிறது.
கடைசி கதை கதாசிரியர் சட்டதரணியாக தான் சந்தித்த தனக்கு பிடித்தமான ஒரு பெரிய மனிதரின்; கோயில், பூஜை புனஸ்காரம் என்று வாழும் மனிதரின் இருண்ட பக்கங்களை காட்டியுள்ளார். அன்னபூரணம் அக்காவின் வாழ்க்கையில் மறுபடியும் ஒளி ஏற்றுவதுடன் கதை முடிகிறது.
மனிதர்களை சிந்திக்க வைத்த கதைகள். பழைமையும் புதுமையும் கலந்த கதைகள் சுவாரசியமானவை, ஒரு காலத்தின் மனிதர்களீன் வரலாற்றை கூறுபவை. மேலும் பல கதைகளுடன் ஆசிரியரை சந்திக்க ஆவலாக உள்ளோம். ’வழிப்போக்கரிகளின் வாக்குமூலம்’ என்ற புத்தகம் ஏற்கனவே பிரசிரித்துள்ளார். இந்த வருடம் ஒரு கவிதைத்தொகுப்பு வர உள்ளது.
– ஜோ