COVID19 தடுப்பூசி: யார் போடலாம், எப்போது ஆன்டிபாடி உருவாகும்? : விளக்கம் தரும் மருத்துவர்

தடுப்பூசி மற்றும் கோவிட்-19 தாக்கத்தின் தற்போதைய நிலை குறித்து நமக்கு இருக்கும் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தொற்றுநோய் மருத்துவர்.
தமிழகத்தை வந்தடைந்துவிட்டன கோவிட்-19 தடுப்பூசிகள். சனிக்கிழமை முதல் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி மற்றும் கோவிட்-19 தாக்கத்தின் தற்போதைய நிலை குறித்து நமக்கு இருக்கும் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்.
முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட எத்தனை நாள்களில் இரண்டாவது தவணை ஊசியைப் போட வேண்டும்?
கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் இரண்டு தடுப்பூசிகளிலுமே 28 நாள்களில் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசி போட்டு எத்தனை நாள்களுக்குப் பிறகு உடலில் ஆன்டிபாடி உருவாகும்?
கோவிஷீல் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தடுப்பூசி போட்டு 42 நாள்களுக்குப் பிறகுதான் உடலில் ஆன்டிபாடி உருவாகும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் கோவிட்-19 வைரஸுக்கு வெளிப்பட்டு நோய் அரும்பல் காலத்தில் இருந்தால் அந்த நபருக்கு தடுப்பூசி வேலை செய்யாது. நோய்த்தொற்று ஏற்படும். கோவாக்ஸின் செயல்திறன் பற்றிய தரவுகள் இன்னும் வெளியிடப்படாததால் எத்தனை நாள்களில் ஆன்டிபாடி உருவாகும் என்பதற்கான ஆதாரம் இல்லை.
ஏற்கெனவே கோவிட்-19 தொற்று வந்தவர்களும் தடுப்பூசி போட வேண்டுமா?
நிச்சயம் போட வேண்டும். அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, நோய்த்தொற்று ஏற்பட்டதால் உடலில் உருவான ஆன்டிபாடியின் வீரியம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு குறையத் தொடங்கும். இரண்டாவதாக கொரோனா வைரஸின் தன்மை அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். புதிய தன்மை கொண்ட வைரஸிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும்.

கோவிட்-19 பாசிட்டிவ்வாக இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். மேலும், ஆன்டிவைரல் மருந்துகளையும் எடுத்துக்கொண்டிருப்பார்கள். அதனால் சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது அல்லது அடுத்த ரெவ்யூவிற்கு வரும்போது தடுப்பூசி போடலாம். கோவிட்-19 சிகிச்சையின்போதே தடுப்பூசி போடக்கூடாது.
யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது
செயல்திறன் குறித்த சரியான புள்ளி விவரங்கள் இல்லாததாலும், தற்போது பரிசோதனை முயற்சியாகவே நடைபெறுவதாலும், நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் (Immuno suppressive) மருந்துகளை எடுத்துக்கொள்ளும் புற்றுநோயாளிகள், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம். தற்போது இந்தியாவில் போடப்படவுள்ள தடுப்பூசிகள் பரிசோதனை முயற்சி என்பதால் குழந்தைகளுக்கும் தற்போது போடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி போட்டால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?
தடுப்பூசி போட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதால், தடுப்பூசி போட்டதும் லேசான காய்ச்சல், சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற சிறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் போட வேண்டாமா?
தடுப்பூசி போட்டாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி, கைகழுவுவது ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். உலகம் முழுவதுக்கும் கோவிட்-19 தடுப்பூசி தயாரித்து வழங்குவதற்கு 2021-ம் ஆண்டுக்கு மேல் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் தொற்றை மற்றவருக்குப் பரப்ப வாய்ப்புள்ளது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் இந்தப் பழக்கங்களையெல்லாம் பின்பற்றியே ஆக வேண்டும்.

தமிழகத்தில் உண்மையாகவே கோவிட்-19 தொற்று குறைந்துவிட்டதா?
உண்மையில் அதனுடன் வாழப் பழகிவிட்டோம் என்றுதான் கூற வேண்டும். பெரியவர்கள் நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு குணமாகிவிட்டது. ஒட்டுமொத்தமாக கோவிட்-19 தொற்றின் நிலை மேம்பட்டிருக்கிறது. ஆனால் முற்றிலும் குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது.
தளர்வுகள் ஏற்பட ஏற்பட அதற்கேற்றாற்போல் விளைவுகளும் ஏற்படுகின்றன. நான் பணிபுரியும் மருத்துவமனையில் நோயாளிகள் அதிகரித்ததால் மூடப்பட்ட கூடுதல் கோவிட் வார்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கிறது. நாம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூற முடியாது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பாதுகாப்பானதா?
பிரிட்டனில் உரு மாறிய தொற்று மீண்டும் ஏற்பட்டதற்கு பள்ளிகள் திறப்புதான் முக்கிய காரணமாக அமைந்தது. சிறிய குழந்தைகளை கோவிட் அதிகம் பாதிப்பதில்லை. அப்படி பாதித்தாலும் அவர்கள் அறிகுறிகளற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால், அவர்கள் வைரஸை மற்றவர்களுக்கு கடத்துபவர்களாக இருப்பார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று இருக்கும்பட்சத்தில் அது வெளியே தெரியாது. ஆனால் ஆசிரியர்கள், வீட்டிலிருக்கும் முதியோர், பெரியவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
ஒடிசாவில் பள்ளிகள் திறந்தபோது பாதிப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தடுப்பூசி கண்டறிதல் என்பது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், முன்களப் பணியாளர்களைப் போலவே ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி கொடுத்த பிறகு பள்ளிகளைத் திறப்பது நல்லது.
பல மருத்துவமனைகளில் கோவிட் படுக்கைகள் காலியாக இருக்கின்றனவே?

பெருந்தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும், யாருக்கு உயிரிழப்புகள் ஏற்படும், எப்படி நோயைக் கையாள்வது உள்ளிட்ட தரவுகள் இல்லை. தற்போது தரவுகள் கிடைத்துள்ளதோடு நோயை எப்படிக் கையாள வேண்டும், நுரையீரலில் எத்தனை சதவிகிதம் பாதிப்பு இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் ஓராண்டாக பகுப்பாய்வு செய்து கண்டறிந்திருக்கிறோம். அதனால் எல்லோரையும் மருத்துவமனையில் அனுமதி செய்வது கிடையாது. வீட்டிலேயே க்வாரன்டீன் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கோவிட் நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறதா?
நிச்சயம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. காரணம், சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம்தான். எந்த நிலையில் எந்த மருந்து கொடுக்க வேண்டும், யாருக்கு என்ன சிகிச்சையளிக்க வேண்டும் என்பது போன்ற வெற்றிகரமான சிகிச்சை முறைகளைக் கையாள்வதால் பல இறப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நோயாளிகள் எண்ணிக்கை அதிரிக்குமா?
தீபாவளி பண்டிகை நேரத்தில் மக்கள் இயக்கம் அதிகரித்ததால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பொங்கல் பண்டிகை நேரத்திலும் அதே போன்று பாதிப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கணிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் கோவிட்-19 பயம் நீங்கிவிட்டது என்ற முடிவுக்கு வரக்கூடாது. கட்டுப்படுத்திதான் வைத்திருக்கிறோம் என்பதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.
நன்றி : விகடன்