கொரோனா தடுப்பூசிகளுக்கு எப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன? : Dr.சஃபி.M.சுலைமான்

கடந்த வருடம் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் ஆராய்ச்சிகளின் பலனாகத் தற்போது தடுப்பூசி விநியோகம் வரை வந்துவிட்டோம். இந்நேரத்தில் இந்தத் தடுப்பூசிகள் எப்படி மக்களுக்கு வழங்க அனுமதிக்கப்படுகின்றன எனப் பார்ப்போம்.
கடந்த வருடம் ஆரம்பித்தது கொரோனா தொற்று. அது அச்சமூட்டத் தொடங்கிய நாள் முதல் உலகமே எதிர்பார்த்துக் காத்திருப்பது, கோவிட்-19-க்கு எதிரான தரமான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கான பதிலைத்தான்.
உலகம் முழுவதும் இருக்கும் தடுப்பூசி மருத்துவ ஆய்வு நிறுவனங்கள், மிகத் தீவிரமான அறிவியல் தேடலில் இருக்கின்றன. 30-க்கும் மேற்பட்ட சிறப்பு நுண்ணியல் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில், 7 தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு படிநிலைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
7 தடுப்பூசிகளில் 4 முன்னிலை
7 தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகளில் கீழ்வரும் 4 தடுப்பூசிகள் முன்னிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
* அமெரிக்காவின் மாடர்னா (Moderna) தடுப்பூசி.
* ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தடுப்பூசி.
* ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் Biontech தடுப்பூசி.
* இந்தியாவில் Bharat Biotech ஆய்வகத்தின் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி.
இவை தவிர, சீனா மற்றும் ரஷ்யாவும் ஆய்வுகளை அடுத்து தங்கள் தடுப்பூசிகளை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.

ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு
மேற்கூறிய ஒவ்வோர் ஆய்வகமும், அவரவர் செய்த ஆய்வுகள் பற்றிய Interim analysis reportகள் மற்றும் அவர்களுடைய தடுப்பூசியுடைய பாதுகாவல் பற்றிய ஆய்வறிக்கையை உலக சுகாதார மையமான WHO மற்றும் அந்தந்த நாட்டின் ஒப்புதல் வழங்கும் அமைப்புகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்துள்ளன.
சில ஆய்வகங்கள் 100% பாதுகாப்பு என்றும், சில ஆய்வகங்கள் 97% பாதுகாப்பு என்றும் விகிதாசார முறையில் தங்கள் ஆய்வு முடிவின் நோய் காக்கும் தன்மையை அறிவித்திருப்பதை பார்க்கிறோம்.
தடுப்பூசியால் வென்ற நோய்கள்
முதலில் ஓர் அடிப்படை மருத்துவ அறிவியல் விவரத்தைப் புரிந்துகொள்வோம். தடுப்பூசி என்பது நம் உடலில் செயற்கையாக அளிக்கப்படும் நோய் மாதிரி. அதாவது, ஒரு பெருந்தொற்று அல்லது ஒரு மிக மோசமான தொற்றுநோய் மனிதர்களைத் தாக்கி, அவர்களுடைய உடலைத் தாக்கி, அவர்களுக்கு அடுத்தடுத்த மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி, உறுப்பு சேதமோ உயிர் பாதிப்போ நடத்தினால், அந்தக் கிருமியையும், அதன் நோய்தரும் நீட்சியையும் தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இப்படி கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளால்தான் இன்று நம்மால் மிகப்பெரிய நோய் அச்சுறுத்தல்களான பெரியம்மை, கக்குவான் இருமல், போலியோ எனும் முடக்குவாதம், காலரா, ரோட்டாவைரஸ் சீதபேதி ஆகியவற்றைக் கடந்துவர முடிந்திருக்கிறது. ஒரு காலத்தில் மிக பயங்கரமான டைஃபாய்டு நோய்கூட, தற்போது மிகச்சாதாரணமாக 2 தவணை ஊசியால் தடுக்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம், இந்தத் தடுப்பூசி அறிவியல்தான்.
தற்போது 40 வயதைத் தாண்டி வாழும் பலருக்கும், அவர்தம் பள்ளி நட்புகளில் யாரேனும் ஒரு நபர் போலியோவினால் பாதிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், நம் குழந்தைகள் தலைமுறையில், பள்ளியில் அப்படி ஒரு மாணவர்கூட பார்க்கக் கிடைக்க மாட்டார் என்று மார்தட்டி சொல்ல முடியும். இதற்குக் காரணம், போலியோ தடுப்பு மருந்து.
தடுப்பூசி பாதுகாவல் – அறிய வேண்டியது
தடுப்பூசிகள் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான பாதுகாவலை அளிக்கும். மீசல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா எனும் தடுப்பூசிகள் பல ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு 9-வது மாதமும், 15-வது மாதமும் வழக்கமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை, குழந்தைகளைத் தாக்கும் மூன்று கொடுமையான நோய்களுக்கான தடுப்பூசிகள். இந்த ஊசியில் இருக்கும் 3 நோய் தடுப்பும் ஒரே அளவு பாதுகாவல் தராது என்கிறார்கள். ஒவ்வொன்றும் 95%, 78%, 85% என ஒவ்வோர் அளவு பாதுகாவல் அளிக்கும்.

தடுப்பூசியின் வேலைகள்
ஒரு தொற்றுநோய் நம்மைத் தொற்றும் நேரத்தில், அது சாதாரண தொற்றாக மட்டும் இருந்து சாதாரணமாகக் கடந்து போகலாம். அல்லது மிகத்தீவிர நோயாக மாறி, பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்பையும், அதன் செயல்பாட்டையும் வெகுவாகத் தாக்கிடலாம். அப்படி நடக்கும் அதிதீவிர தாக்குதல்தான், அந்தத் தொற்றுநோய் ஏற்படுத்தும் விளைவு.
உதாரணமாக, டி.பி, மோசமாகப் பாதிக்கும் மூளை டி.பி, முதுகுத்தண்டு டி.பி, போலியோ தரும் உடல் ஊனம், மூளை முடக்குவாதம், வெரிசெல்லா ஏற்படுத்தும் மூளைக் காய்ச்சல் என இவ்வகை தொற்றுகள் தரும் உயிர் பாதிப்புகளைக் களைவதும், அந்த ஆபத்தை ஏற்படுத்தும்வரை அந்தத் தொற்று பயணம் செய்திடுவதைத் தடுப்பதுவுமே தடுப்பூசியின் வேலை.
நாம் வெளியில் இருந்து கொடுக்கும் தீநுண்மமோ, செயலிழக்கப்பட்ட கிருமியோ, அந்தக் கொடுமையான தொற்று ஏற்படுத்தும் மிக மோசமான பாதிப்பைத் தவிர்த்திட உதவும். நம் உடல் தடுப்பாற்றல் அணுக்களை, இதே தொற்று மீண்டும் வந்தால் அது மிகத் தீவிர பாதிப்பு ஏற்படுத்திவிடாமல் மட்டுப்படுத்திட முனையும்.
தடுப்பூசி அங்கீகார வழிமுறைகள்
இதுவரை புழக்கத்தில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் ஒவ்வொன்றும் தற்போது நாம் அறியப்படும் படிநிலை ஆய்வுகள் எனப்படும் Serial Phase trials மூலமாகத்தான் மனித இனத்துக்குக் கிடைத்தன. அவ்வகையில் ஒவ்வொரு தடுப்பூசி ஆய்வகமும் தான் தயாரிக்க இருக்கும் ஊசி பற்றிய விவரதந்தை உலக சுகாதார மையம் மற்றும் அந்தந்த நாட்டின் ஒப்புதல் வழங்கும் அமைப்புகளுக்குத் தெரிவிக்க வேண்டும். பின்னர் ஆராய்ச்சி செய்யும் உரிமை பெற்ற பின், அவரவருடைய ஆய்வக தேவைக்கேற்றவாறு இந்த ஆராய்ச்சியை அந்தந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும்.
இது 3 முதல் 5 படிநிலை ஆய்வாக இருக்கக்கூடும். Phase 0 to Phase 5 என அறியப்படும் இந்த ஆராய்ச்சி முடிவுகளை ஆய்வகங்கள் செவ்வனே முடித்து, அதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வறிக்கையை தயார் செய்து, அந்தந்த படிநிலை ஆய்வுக்குழுமை அதை உலக சுகாதார மையத்துக்கும், அந்தந்த நாட்டின் ஒப்புதல் வழங்கும் அமைப்புகளுக்கும் சமர்ப்பிக்கும். மேலும், அதை ஒரு பொதுமையான ஊடகத்தில் மக்கள் அறியும்படி தெரிவிக்க வேண்டும் என்பது விதி.

அப்படித் தெரிவிக்கப்பட்ட முதற்கட்ட ஆய்வு தொகுப்புகள், உலக சுகாதார மையம் எதிர்பார்க்கும் நெறிமுறைகளுடன் இருந்தால், மனிதர்களிடம் நடத்திய முழுமையான சோதனை ஆய்வை அங்கீகரித்து, அவசர தேவைக்கான அனுமதி எனப்படும் Emergency Use authorisation ஒப்புதல் அளிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இப்படித்தான் ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் EUA அனுமதி பெற்று தடுப்பூசியை அளித்து வருகின்றன. தற்போது உருமாறி இருக்கும் புதுவகை கொரனாவுக்கும் இதே தடுப்பூசிகள் பாதுகாப்பு அளித்திட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
தடுப்பூசி வதந்திகள்
தடுப்பூசி மருத்துவத் துறையில் முதல்முறையாக mRNA எனப்படும் புதிய மரபணு நுண்ணியல் நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் பற்றி பரப்பப்படும் வதந்திகள் பல. அவையெல்லாம் உண்மையல்ல. இவ்வகை தொழில்நுட்பத்தால் மனித இனத்திற்கோ, நம் மரபணுவிற்கோ எந்தத் தீங்கும் நிச்சயமாக ஏற்படப்போவதில்லை. மேலும், இதுபோன்ற mRNA வகை தடுப்பூசி ஆராய்ச்சிகள் அடுத்தடுத்த பரிணாமம் பெற்றால், புற்றுநோய், சர்க்கரை நோய் எனப் பல நோய்களைத் தடுப்பூசி கொண்டே வென்றிடும் ஆற்றல் நமக்குக் கிடைத்திடும் என்பது அறிவியல் உண்மை.
இந்திய தடுப்பூசிகள்
நம் இந்தியாவில் கிடைக்கவிருக்கும் தடுப்பூசி பற்றி அறிவோம். சமீபத்தில் நம் நாட்டில் இரண்டு வகையான தடுப்பூசிகள் ICMR எனும் மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் DCGI எனும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றை பொதுஜன பயன்பாட்டிற்காக அனுமதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வில், மனிதக் குரங்குகளான சிம்பன்ஸி இனங்களுக்குள் அடெனொ வைரஸ் எனப்படும் கொரோனாவுக்கு நிகரான தீநுண்மத்தைச் செலுத்தினர்.
அதை அந்த மிருக செல்களுக்குள் வளரவிட்டு, அதை மீண்டும் அந்த விலங்கின் செல்களில் இருந்து ஆய்வகத்தில் தனியே பிரித்து எடுத்தனர். அந்தப் பிரிக்கப்பட்ட வைரஸின் மரபணுவை கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிதான் இது. பில்கேட்ஸின் GAVI எனப்படும் தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன், மக்களுக்கு மலிவாகத் தடுப்பூசி கிடைத்திடும் வண்ணம் இதைக் கொண்டு வந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மருந்து நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் காப்புரிமையைப் பெற்று, அதை விநியோகித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிட்யூட் எனப்படும் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகிக்க இருக்கிறது. இந்தத் தடுப்பூசியைப் பொறுத்தவரை முறையாக அதன் படிநிலை ஆய்வுகளைச் செய்து, முழுவதும் பூர்த்தியான ஆராய்ச்சிப் படிவத்தின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துதான், தடுப்பூசி விநியோகத்தைத் தொடங்கியிருக்கிறது.
அடுத்ததாக COVAXIN. பாரத் பயோடெக் எனப்படும் இந்திய நாட்டின் தடுப்பூசி மருந்து நிறுவனம், ஐ.சி.எம்.ஆர் ஆராய்ச்சி மையத்துடன் தம் ஆய்வகத்தில் தயாரித்து இருக்கும் தடுப்பூசி இது. வழக்கமாகத் தடுப்பூசி தயாரிக்கும் முறையான, தொழில்நுட்ப ரீதியாக வலுவிழக்கச் செய்த வைரஸை (Inactivated virus) உடலில் செலுத்தி எதிர்ப்பாற்றல் உண்டாக்கிடும் முறையைக் கையாண்டு இதை உருவாக்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால், இதுவரை பொதுமக்கள் அறியும்படி எவ்வித படிநிலை ஆய்வறிக்கையையும் சமர்ப்பிக்காது தடுப்பூசி விநியோகம் செய்யப்படவிருப்பது, நாட்டில் இதுவே முதல் முறை என்கின்றனர்.

– நன்றி: விகடன்