சப்ரியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கண்டியில் நாளை ஆர்ப்பாட்டம்.
தேசிய பாதுகாப்புக்கு சப்ரியால் அச்சுறுத்தல்
சிங்கள அமைப்பு கடும் சீற்றம்.கண்டியில் நாளை ஆர்ப்பாட்டம்
சட்டத்தரணிகளைப் பிரதான பொலிஸ் அதிகாரிகளாக நியமிப்பதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை புத்திஜீவிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்து, தேசிய பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அலி சப்ரியை அமைச்சரவை அமைச்சுப் பதிவியிலிருந்து விலக்குமாறு வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“அரசின் மிகவும் முக்கியத்துவமுடைய அமைச்சுப் பதவியை வகிக்கும் அலி சப்ரி, இனங்களுக்கிடையில் பேதங்கள் ஏற்படும் வகையில் தெரிவித்த கருத்து, 69 இலட்சம் மக்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட அரசின் அமைச்சரொருவரால் ஜனநாயகமுடைய சமூகத்தில் மக்கள் எதிர்பார்க்காததொரு விடயமாகும்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், சட்டத்தரணிகளைப் பிரதான பொலிஸ் அதிகாரிகளாக நியமிப்பதற்கு அமைச்சரவையில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரம் கற்ற மக்கள் சமூகத்தின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அலி சப்ரியை அமைச்சரவை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இதனை வலியுறுத்தி அமைதியான முறையில் கண்டி தலதா மாளிகை சுற்றுவட்டாரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தொடர்பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் மகா சங்கத்தினருக்கும் இதன்போது தெளிவுபடுத்தப்படும்”என்றுள்ளது.