இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,57,985 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 181 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,52,274 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,96,885 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17,170 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1.44 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 96.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 2.10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,08,826 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நாடு முழுவதும் நேற்று வரை 18,65,44,868 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று ஒரே நாளில் 7,79,377 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த சில மாதங்களில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.