நினைவிலிருந்து மறையாத போராட்டங்கள் : சுவிசிலிருந்து சண் தவராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்ட விடயம் இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இடையே ஒரு ஜக்கியத்தைத் தோற்றுவித்திருக்கின்றமை பெரும் மகிழ்வைத் தருகின்றது.
துன்பத்திலும் மகிழ்ச்சி என்பதைப் போன்று உருவாகியுள்ள இந்த புதிய சூழல் மேலும் கட்டியெழுப்பப் படுவதை இரண்டு சமூகங்களுமே உறுதி செய்து கொள்ளுதல் சமூகங்களின் எதிர்காலத்திற்கும் ஒட்டு மொத்த இலங்கையின் எதிர்காலத்துக்கும் மிகவும் நல்லது.
கொரோனாக் கொள்ளை நோயால் மரணத்தைத் தழுவுகின்ற முஸ்லிம் மக்களின் உடலங்கள் புதைக்கப் படுவதற்கு எதிராக சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், ஏலவே இலங்கையின் எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள இனங்களை நெருங்கிவரச் செய்திருந்தன. அதன் நீட்சியாக தற்போதைய விவகாரம் இரு சமூகங்களையும் மேலும் நெருங்கச் செய்திருக்கின்றது.
விமர்சனம் இல்லாத நல்லிணக்கம் சாத்தியமா?
இதிலே, துயரம் மிகுந்த செய்தி என்னவெனில் கடந்த காலங்களில் இரண்டு தரப்பிலும் நடைபெற்ற மீறல்களைப் பற்றிய விவாதங்கள் எவையும் இன்றி, மீள் நல்லிணக்கத்திற்கான உரையாடல்கள், செயற்பாடுகள் எவையும் இன்றி பேரினவாதத்தின் நிர்ப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய நெருக்கம் ஏற்படுவதே. ஒரு வகையில் இது ஒரு தந்திரோபாய நகர்வே அன்றி வேறில்லை. பேரினவாதம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, முன்னைய காலங்களைப் போன்று முஸ்லிம் சமூகத்தை அரவணைக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் இந்த நெருக்கம் சில வேளைகளில் காணாமற் போகக் கூடும்.
எனவே, அத்தகைய ஒரு சூழல் உருவாகுவதற்கு முன்பதாகவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகளுக்கு ஊடாகப் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
“மறப்போம், மன்னிப்போம்” என்ற உளுத்துப்போன அணுகுமுறையைக் கைவிட்டு, அனைத்து விடயங்களையும் பொது வெளியில் விவாதித்து, யார் தவறு செய்திருந்தாலும் முறையான விதத்தில் அவற்றுக்கு வருத்தம் தெரிவித்து, முடிந்தால் பரிகாரத்தைத் தேடிக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே சாலச் சிறந்தது. அதற்கான அரிய வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது வரலாற்றுக் கடமையாகின்றது.
இத்தகைய அணுகுமுறையை வலியுறுத்தியே ஆக வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில், இன்று கரங் கோர்ப்பதற்குத் தயாராக நெருங்கி வந்துள்ள தரப்புகள் நேற்றுவரை எவ்வாறு இருந்தார்கள் என்பதை உலகறியும். ஒருவர் மீது ஒருவர் காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும், பகைமையுணர்வும் கொண்டிருந்த இந்தச் சக்திகள் ஒரே நாளில் புனிதர்கள் ஆகிவிட்டார்கள் எனக் கருதுவது கற்பனைக்கு அப்பாற்பட்டது. யாரும் அவ்வாறு ஒரே இரவில் புனிதர்கள் ஆகிவிடுவார்கள் என நினைப்பதும் அறிவிழிவு.
சிங்களப் பேரினவாதத்தின் இலக்காக முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபியை அழித்தல் அமைந்திருந்தாலும், அதனுடைய கருத்தியல் நோக்கம் ஆயுதப் போராட்டம் தொடர்பான நினைவுகளை தமிழர் மனங்களில் இருந்து அழித்து விடுவதே. யுத்த வெற்றி நினைவுச் சின்னங்களை மென்மேலும் அமைப்பதில் ஆர்வங் காட்டிவரும் சிறி லங்கா அரசாங்கம், தமிழர் சார்ந்த நினைவுச் சின்னங்களை அழிப்பதிலேயே ஆர்வம் கொண்டு செயற்பட்டு வருகின்றது. சின்னங்களை அழித்தாலும் எண்ணங்களை அழிப்பது சுலபமல்ல என்பதை ஆக்கிரமிப்பு எண்ணங் கொண்டவர்கள் என்றுமே புரிந்து கொள்வதில்லை.
பேர்லின் ஊர்வலம்
இதே போன்ற ஒரு சம்பவம் யேர்மனியிலும் நடந்தேறியிருக்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்சிய சிந்தனாவாதிகளுள் ஒருவர் என அறியப்பட்டவர் றோசா லக்சம்பேர்க். அவருடைய மறைவை ஒவ்வொரு ஆண்டும் யனவரி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் அவரது உடலம் புதைக்கப்பட்டுள்ள யேர்மனியின் தலைநகரான பேர்லினில் நினைவு கூர்வது அவரது ஆதரவாளர்களின் வழக்கம். கொரோனாக் கொள்ளை நோய்க் காலமாக இருந்த போதிலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் நினைவை உலகின் எண்ணத்தில் இருந்து அழித்துவிட இடந்தரக் கூடாது என்ற சிந்தனையுடன் ஒரு நினைவு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தடை செய்யப்பட்ட குனுது எனப்படும் முன்னைநாள் சோசலிச கிழக்கு யேர்மன் இளைஞர் அணியின் கொடிகளை வைத்திருந்தார்கள், நீல நிற மேலங்கிகளை அணிந்திருந்தார்கள் என்ற காரணம் கூறப்பட்டு காவல் துறையின் தாக்குதலுக்கு ஆளாகினார்கள். துணைக் காரணமாக கொரோனாக் கொள்ளை நோய் தொடர்பான சுகாதார விதிகளும் – இலங்கையைப் போன்றே – காட்டப்பட்டன.
பாரிய இழுபறிகளுக்குப் பின்னர் கிட்டத்தட்ட 1,500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஊர்வலம் றோசா லக்சம்பேர்க் மற்றும் அவரோடு கொலை செய்யப்பட்ட அவரது சகாவான கார்ல் லீப்க்நெக்ற் ஆகியோரின் நினைவுக் கல்லறை உள்ள மயானத்தை அடைந்தது. குறித்த நாளில் ஒன்றிற்கு மேற்பட்ட ஊர்வலங்கள் நடைபெற்றதுடன், இணைய வழி நினைவு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யார் இந்த றோசா லக்சம்பேர்க்?
1871 ஆம் ஆண்டில் அப்போதைய ரஸ்யப் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்த போலந்து நாட்டில் பிறந்தவர் றோசா. சிறுமியாக இருக்கும் போதே தனது 16 ஆவது வயதில் பொதுவுடமைக் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்ட அவர் வெகு விரைவிலேயே அரசாங்;கத்தின் வேண்டப்படாத நபர்களின் பட்டியலில் இணைந்து கொண்டார். நாட்டை விட்டுத் தப்பியோடிய அவர் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் தஞ்சம் அடைந்தார். அங்கே இருந்தவாறே தனது கருத்துக்களோடு ஒத்துப் போவோரின் தொடர்புகளைப் பேணிவந்த அவர் 1898 ஆம் ஆண்டு யேர்மனி சென்றார். அப்போது யேர்மனியின் முற்போக்குக் கட்சிகளுள் ஒன்று எனக் கருதப்பட்ட சோசலிச ஜனநாயகக் கட்சியில் (ளுPனு) இணைந்து கொண்ட அவர் வெகு விரைவிலேயே கட்சியின் பேச்சாளாரக உயர்ந்தார். அசாதாரண பேச்சுத் திறமையும், அறிவாற்றலும் கொண்ட பெண்மணியான அவர் யேர்மன் நாட்டில் மிகவும் அறியப்பட்ட ஒரு பெண்மணியானார்.
“சுதந்திரம் என்பது மாற்றுச் சிந்தனையாளர்களின் சுதந்திரமே” என்ற கோட்பாட்டை உடைய அவரால் தான் சார்ந்திருந்த கட்சியோடு தொடர்ந்து இணைந்திருக்க முடியாமல் போனது. சோவியத் பாணியிலான, ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவிக் கொள்வதே உண்மையான புரட்சி என நம்பிய அவரால் சீர்திருத்தப் போக்கையும், அதீத ஜனநாயகத்தையும் பேண விழையும் ஒரு கட்சியில் நீடிக்க முடியாமற் போனதன் காரணத்தைப் புரிந்து கொள்வது கடினமல்ல.
ஆனால், தான் சார்ந்திருந்த கட்சியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்ட அவர் அதே கட்சியின் ஆட்சிலேயே வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டமையை வரலாற்றின் வினோதம் என்பதா அல்லது உண்மையான புரட்சியாளர்களுக்கு வரலாறு கொடுக்கும் இடம் என்பதா எனப் புரியவில்லை.
சிறை வாசம்
முதலாம் உலகப் போர் கருக் கொள்ளத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் யேர்மனியில் படைக்கான ஆட்சேர்ப்பு நடந்த போதில் 1913 ஆம் ஆண்டு செப்டெம்பர் இறுதியில் பிராங்போர்ட் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் படைத் துறையில் சேர்வதற்கு எதிராகப் பேசினார் என்ற குற்றச் சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட வழக்கில் 14 மாத சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
1915 பெப்ரவரியில் சிறை வைக்கப்பட்ட அவர் ஒரு வருடத்தின் பின்னர், முன் கூட்டியே விடுவிக்கப் பட்டாலும் 1916 யனவரியில் இராணுவச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதானார்.
அவரோடு அவரது சகாவும் பின்னாளில் யேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை அவரோடு இணைந்து தோற்றுவித்தவரும் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்ல் லீப்க்நெக்ற் அவர்களும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் றோசா லக்சம்பேர்க் தனது பரப்புரையைக் கைவிடவில்லை. யேர்மன் நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அவசியம் பற்றியும், முதலாம் உலக யுத்தத்திற்கு எதிராகவும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்தார். யூனியஸ் என்ற புனைபெயரில் அவர் எழுதிய ஆக்கங்களை அவர்களது சகாக்கள் இரகசியமாகப் பெற்றுப் பிரசுரம் செய்தனர்.
விடுதலை
இரண்டரை வருடங்களுக்கும் மேல் சிறை வாசம் அனுபவித்த இருவரும் 1918 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட 3 நாட்களில் அதாவது நவம்பர் 11 ஆம் திகதி முதலாம் உலக யுத்தம் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்யப்படும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
சிறையில் இருந்து விடுதலையாகிய இருவரும் இணைந்து சுதந்திர சோசலிசக் குடியரசைப் பிரகடனம் செய்தனர். தாங்கள் முன்னர் உருவாக்கிய ஸ்பார்ட்டகஸ் ஒன்றியம் என்ற அமைப்பைப் புனரமைப்புச் செய்த அவர்கள் செங்கொடி என்ற பெயரில் ஒரு பத்திரிகையை வெளிக் கொணர்ந்தார்கள். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், மரண தண்டனை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துப் பரப்புரை செய்தனர்.
படுகொலை
தொடர்ந்து 1919 யனவரி முதலாந் திகதி யேர்மனிய பொதுவுடமைக் கட்சியை ஆரம்பித்து வைத்தனர். புரட்சி ஊடாக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற அறைகூவலை விடுத்த இருவரும் தமது முன்னைய சகாக்களும், ஆளுங் கட்சியுமான சோசலிச ஜனநாயகக் கட்சியின் கொலைப் பட்டியலில் இடம்பிடித்துக் கொண்டனர்.
இடதுசாரிப் புரட்சியை முறியடிக்கும் பொறுப்பை அரசுத் தலைவர் பிரிட்ரிக் ஏபர்ட் குசநமைழசிள எனும் பெயரிலான துணை இராணுவக் குழுவின் கரங்களில் ஒப்படைத்தார். முதலாம் உலகப் போரில் ஈடுபட்டு நாடு திரும்பிய படையினரைக் கொண்டதாக இந்தத் துணை இராணுவக் குழு அமைந்திருந்தது. யனவரி 11 இல் புரட்சி அதீத வன்முறையால் ஒடுக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த றோசா லக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்நெக்ற் ஆகியோர் 15 ஆம் திகதி பேர்லினில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
பலத்த சித்திரவதைகளின் பின்னர் துப்பாக்கியின் பின்புறத்தால் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட றோசா லக்சம்பேர்க் சுட்டுக் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட அவரது உடலம் பேர்லினில் உள்ள லான்ட்வேர் கால்வாயில் வீசப்பட்டது. கார்ல் லீப்க்நெக்ற் வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடலம் அடையாளம் தெரியாத உடலம் என்று கூறப்பட்டு மயானத்தில் ஒப்படைக்கப்பட்டது.
என்றென்றும் நினைவில்
றோசா லக்சம்பேர்க்கின் உடலம் ஐந்து மாதங்களின் பின்னர் யூன் முதலாம் திகதி கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் இருவரது உடலங்களும் பிரிட்ரிக்ஸ்பெல்ட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு அவர்களது ஆதரவாளர்களால் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. யேர்மன் புரட்சிவாதிகளான அவர்கள் இருவரும் 102 வருடங்கள் கடந்தும்; நினைவுகூரப் படுகின்றார்கள் என்பதே அவர்களின் பெறுமதியை உணர்த்துவதற்குப் போதுமானவை.
சோவியத் ஒன்றியத்தின் தலைவர்களான விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொஸ்கி ஆகிய இருவரும் றோசா லக்சம்பேர்க் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து கிழக்கு யேர்மனி உருவான போதில் றோசா லக்சம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்நெக்ற் உட்பட 1919 ஆம் ஆண்டு இடதுசாரிப் புரட்சியின் போது கொல்லப்பட்ட ஆயிரக் கணக்கான புரட்சியாளர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டன. அது மாத்திரமன்றி அவரது கொள்கையைப் பின்பற்றுபவர்கள் அவரின் பெயரிலான ஆய்வு மையம் ஒன்றையும் செயற்படுத்தி வருகின்றனர். உலகின் பல நாடுகளில் அவரின் பெயர் தாங்கிய இடங்கள் இன்றும் உள்ளன.
புரட்சியை நேசிப்பவர்களுக்கு றோசா லக்சம்பேர்க் அவர்களின் வாழ்வு ஒரு சிறந்த முன்னுதாரணம். தனது கொள்கையில் பற்றுறுதி கொண்டிருந்த அவர் இறுதிவரை – எத்தகைய சூழ்நிலையிலும் – சமரசம் செய்து கொள்வில்லை. தனது கொள்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த உன்னதப் பெண்மணி அவர்.
றோசா போன்றவர்களின் எதிரிகள் அவர் போன்றவர்களின் நினைவுகளை இருட்டடிப்புச் செய்வதிலேயே குறியாக உள்ளனர். அவரது உடலம் கால்வாயில் வீசப்பட்டதன் நோக்கம் அவருக்கான ஒரு நினைவுச் சின்னம் கூட இருக்கக் கூடாது என்பதே. உலகப் புரட்சியாளர் சே குவேராவுக்கும் இவ்வாறே நிகழ்ந்தது. பொலிவியாவில் வைத்துக் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அவரின் உடலம் ஒரு விமான ஓடுபாதையின் கீழ்ப் புதைக்கப்பட்டிருந்ததை அறிவோம்.
புரட்சியாளர்களின் வரலாறை ஒரு போதும் மறைக்க முடியாது. அவர்களது வாழ்க்கை நீரினுள் அமுக்கப்படும் பந்துகளைப் போன்றது. எவ்வளவு அழுத்தமாக உள்நோக்கி அமுக்கப் படுகின்றனவோ அவ்வளவு வேகமாக அவை மேலெழுவதற்கான வாய்ப்பே உள்ளது.
ஆயிரம் கரங்கள் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பதே மெய்.