ஐ.நாவின் புதிய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க அரசு மறுப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் 46ஆவது அமர்வின்போது கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக செயலாற்றிவரும் முக்கிய நாடுகளது குழுவினர் இணை அனுசரணை வழங்குமாறு இலங்கை அரசிடம் விடுத்திருந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது .
இலங்கை தொடர்பாக செயலாற்றிவரும் முக்கிய நாடுகள் குழுவில் பிரிட்டன், கனடா, ஜேர்மனி, வடக்கு மஸிடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகியன இடம்பெற்றுள்ளன.
புதிய பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைவுகள் சமரசமுடையதாகக் காணப்படுகின்றன என்று சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடும் அதேவேளை, இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இணக்கப்பாடுடைய பிரேரணையைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுகின்றார்.
இணக்கப்பாடுடைய பிரேரணைக்கு உடன்படுவது இலங்கை அரசைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக சவால் மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இலங்கையின் அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதால் ஜெனிவாத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமை ஓர் அரசைப் பதவியிலிருந்து அகற்றும் நிலைமைக்கு வழிகோலியிருந்தது. இணக்கப்பாடுள்ள தீர்மானம் என்றாலும் அது நடக்குமா? இல்லையா?? என்று கூற முடியாது . ஆனாலும், அதுவும்கூட அரசுக்குப் பெரும் சவாலாகும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.