யாழில் காணி சுவீகரிப்புக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்! அரசியல்வாதிகளும் பங்கேற்பு.
யாழில் காணி சுவீகரிப்புக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்! அரசியல்வாதிகளும் பங்கேற்பு.
பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணி சுவீகரிப்புச் செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் யாழ். வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் பிரதேசத்தில் 11 பேருக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணியைக் கடற்படையின் தேவைக்காகச் சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும் பிரதேச மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர். ஆயினும், காணி அளவீட்டுத் திணைக்கள அதிகாரிகள் காணி அளவிடுவதற்கு இன்று அங்கு வருகை தரவில்லை .
ஆனபோதும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களிடமே வழங்கக் கோரி வேலணைப் பிரதேச செயலகத்துக்குப் பேரணியாகச் சென்ற மக்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பிரதேச செயலகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்திப் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
இவ்வேளையில் அங்கிருந்தவர்களிடம் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் சோதிநாதன், “இந்தக் காணிகளைச் சுவீகரிக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் அதில் மக்களுக்கு விருப்பமின்மை அல்லது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அதனை நாம் தற்காலிகமாக இடைநிறுத்துகின்றோம். இது தொடர்பில் காணி அமைச்சுக்குத் தெரியப்படுத்தி அதன்பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும்” – என்றார்.
இதையடுத்துப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.