விழி திறந்த தோழர் ஜெமினி என்ற தேனீ : M R Stalin Gnanam
கடந்த இருபதுவருட காலத்தில் தமிழ் சூழலில் இயங்கிவந்த இணையத்தளங்களின் வரிசையில் ‘தேனீ ‘ என்னும் இணையதளம் மறக்கமுடியாததொன்றாகும். அந்த காலங்களில் குறிப்பாக புகலிடங்களில் இருந்து மட்டுமே இணையத்தளங்களை நாடாத்துவது சாத்தியமானதாகவிருந்தது.
அதிலும் இலங்கை தமிழ் அரசியல் மற்றும் இலக்கிய சூழல் சார்ந்து பொதுசன அபிப்பிராயத்துக்கு மாற்றானதாக கருதப்படும் செய்திகளை அல்லது கட்டுரைகளை வெளியிடுவதற்கான இணையத்தளங்கள் மிக அரிதாகவே காணப்பட்டன. தமிழ் தேசியம் என்கின்ற கோதாவில் தனியொரு அமைப்பினரின் பிரச்சார தளங்களாகவே எல்லாவித இணையத்தளங்களும் காணப்பட்டன. யுத்தகால செய்திகளை வெளியிட்டு புகழ் பெறுவதில் பல இணையங்கள் நான் முந்தி நீ முந்தி என்று செயற்பட்டன.வேறு சில இணையங்களோ மெய்சிலிர்க்கும் யுத்த ஆருடம் சொல்லுகின்ற ஆய்வுகளை வெளியிடுவதில் புகழ்பெற்றனவாயிருந்தன. ‘உள்ளேவிட்டு அடிக்கின்ற’ யுத்த தந்திர கட்டுரைகள் ஊடாக பல திடீர் இராணுவ ஆய்வாளர்களை தமிழ் கூறும் நல்லுலகுக்கு தந்தவையும் இத்தகைய இணையத்தளங்களேயாகும்.
அதேபோல சில இணையங்கள் ‘தமிழ் தேசிய துரோகி’களை இனம்காணவென்றே நடத்தப்பட்டன. அவர்கள் மீது சேறடிக்கவும் பொய் குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசவும் அதையும் தாண்டி மரணதண்டனை எச்சரிக்கை விடுப்பதற்காகவும்கூட இத்தகைய தளங்கள் நடாத்தப்பட்டன.
விசேடமான சில இணையங்களோ ‘சா’ வீட்டு செய்திகளை வெளியிடுவதில் புகழ்பெற்றிருந்தன. ஒரு செய்தியையோ கட்டுரைகளையோ பிரசுரிப்பதில் பேணப்படவேண்டிய ஊடக தர்மம் பற்றி எள்ளளவிலும் கவலைகொள்ளாத வெறும்பயல்களால் நிரம்பியிருந்தன தமிழ் இணையத்தளங்களின் ஆசிரியபீடங்கள்.
இத்தனைக்கும் மத்தியில்தான் ஒரு மனிதன் ஜெர்மனியிலிருந்து தேனீ என்கின்ற ஒரு இணையத்தளத்தை நடத்திக்கொண்டிருந்தான். ஆனால் அந்த இணையமோ இவையனைத்திலுமிருந்து முற்றாக வேறுபட்டு நின்றது. தமிழ் சூழலில் வெளியிடமுடியாத பல கருத்துக்களுக்கு இடம்தந்தது தேனீ. யுத்தகாலத்தில் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை வைத்து அதில் பிழைப்பு நடாத்தும் பிழைப்புவாத இணையமாக அது இருக்கவில்லை. யுத்தத்தின் பிடியில் சிக்கித்தவித்த மக்களின் வாழ்வியல் துயரங்களை சுமந்து நின்றன தேனீயின் பக்கங்கள்.மனித வாழ்வின் உன்னதங்களை தொலைத்துவிட்டு மாவீரம் பேசுவது கடைந்தெடுத்த கயமைத்தனம் என்று எழுந்த குரல்களின் நியாயங்களை உயர்த்திப்பிடித்தது தேனீ. அத்தகைய கட்டுரைகளை தேடித்தேடி பிரசுரிக்க அது தவறவில்லை. சம்பவங்களை செய்திகளாக்கி பிரசுரிப்பதை விடுத்து குறித்த சம்பவங்களின் பின்னணிகளை அலசி ஆராய்ந்து எழுதப்படுகின்ற ஆய்வுக்கட்டுரைகளை படிப்பதற்கென்றே தேனீயின் வாசகர்கள் புகலிடமெங்கும் இருந்தார்கள். அதுமட்டுமன்றி இலங்கை இந்தியாவில் அரசியல்,இலக்கிய பரப்பில் இருக்கக்கூடிய பலர் தேனீயின் தீவிர வாசகர்களாய் இருந்தனர்.
அவ்வேளைகளில் புகலிட இலக்கியத்தின் முக்கிய வெளிப்பாடுகளான இலக்கிய சந்திப்பு மற்றும் பெண்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளை துரோக முத்திரைக்குத்தி தமிழ் தேசிய நியாயவாதிகள் காட்டுக்கூச்சல் போட்டனர். ஆனால் சர்வதேசரீதியாக பரந்திருந்த தமிழ் வாசகர்களுக்கு விலாவாரியாக இத்தகைய சந்திப்பின் தாற்பரியங்களை தரிசிக்கும் வாய்ப்புகளை தேனீயின் பக்கங்களே வழங்கின.
யுத்தத்தில் பாதிப்புற்ற மக்களின் சார்பில் மனிதஉரிமைக்காக குரல் எழுப்புதல் ‘துரோகத்தனம்’ என்று அடித்து ஆணியறைந்து பிரசித்தம் பண்ணியவர்களுக்கு பயந்து தேனீ தனது பக்கங்களை ஒரு போதும் மூடிக்கொண்டதில்லை. சகோதரப்படுகொலைகளில் நசுக்கப்பட்டு கிடந்த குரலற்றவர்களுக்கான குரலாக தன்னை அடையாளப்படுத்தி நின்றது தேனீ. இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பள்ளிவாசல் படுகொலை மற்றும் யாழ்ப்பாண இனச்சுத்திகரிப்பு என்பன மானுடகுலத்துக்கு எதிரான யுத்தக்குற்றங்கள் என்பதை உரத்துச்சொன்ன எழுத்தாளர்களுக்கு தேனீயின் பக்கங்கள் ஒருபோதும் எல்லைவிதிக்கவில்லை. அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் வலிகளை மட்டுமல்ல வெருகல் படுகொலையினதும் வலிகளை பேசும் வாய்ப்புகளை வழங்கிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் தேனீ முதன்மையாய் இருந்தது.
அரசியல், இலக்கியம்,வரலாறு,நூல்விமர்சனங்கள்,சினிமா,மொழிபெயர்ப்புகள் சார்ந்த கட்டுரைகளுடன் மாக்ஸிஸம்,பெண்ணியம், தலித்தியம்,பின்நவீனத்துவம், சூழலியல், —– என்று பலதரப்பட்ட கருத்தாக்கங்கள் பற்றிய ஆயிரக்கணக்கான கட்டுரைகளை தேனீ வெளியிட்டுள்ளது. ஒரு ஊடகவியலாளனுக்கு இருக்கவேண்டிய பக்குவமும், மனோதிடமும், பொறுப்புணர்வும், பக்கசார்பின்மையும் எப்படியிருக்கவேண்டுமென்பதை இந்த தேனீ ஆசிரியர் தோழர் ஜெமினியின் வாழ்வில் இருந்து தமிழ் சமூகம் கற்றுக்கொள்ளவேண்டும்.