கிளிநொச்சி இரணைதீவு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் இரணை தீவு பகுதியின் கடற்றொழிலார்கள் அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்யமுடியும் என கிளிநொச்சி அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்ரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைதீவு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் மாவட்ட அரச அதிபர் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இரணைதீவு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இரணைதீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் விரைவிலேயே முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பாக பாடசாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் கடற்போக்குவரத்து தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
குறிப்பாக கடற்தொழிலாளர்களினால் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்ற பிரச்சினையாக தாங்கள் தொழில் செய்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் அது தொடர்பில் அரசாங்க அதிபரிடம் கேட்ட போது இரணை தீவைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளை காண்பிக்கும் பட்சத்தில் அவர்கள் தொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய கலந்துரையாடலில் கடற்படை அதிகாரிகள் பூநகரி பிரதேச செயலாளர் பிரதேச சபையினர் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.