கோட்டாவை ஏன் தனிமைப்படுத்தவில்லை? : ஹேஷா விதானகே
“இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமான தொடர்பைப் பேணிய ஜனாதிபதியை ஏன் இன்னமும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை?”
– இவ்வாறு கேள்வி எழுப்பினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே.
நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகைலேயே அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும் டயர் தொழிற்சாலையொன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
எனினும், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்குக் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஜனாதிபதியைச் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது அவசியமில்லையா?
எமது ஆட்சிக் காலத்தில் விளையாட்டு டயர் நிறுவனம் ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளதாக விமர்சித்தவர்கள்தான் தற்போது அதே டயர் நிறுவனத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
எனவே, இப்போதைய அரசு எதிர்கட்சியாக இருந்த காலத்தில் எம் மீது முன்வைத்த விமர்சனங்கள் அனைத்தும் பொய்யானவையாகும். நாட்டு மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.