வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.சி.சிறீதரன்
வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை
நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்
நாடாளுமன்றில் கூட்டமைப்பு கோரிக்கை
“தமிழர்கள் இனியும் இந்த நாட்டின் சிங்களவர்களுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் நேற்று கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தானே போரை வென்றேன், நானே பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் என அண்மையில் கிழக்கில் ஒரு இடத்தில் கூறியுள்ள நிலையில், இந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேறு என்ன சாட்சியங்கள் தேவை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டில் இனியும் தமிழர்கள், சிங்களவர்கள் இணைந்து வாழ முடியாது என்பதற்கு ஜனாதிபதியே சாட்சியாக உள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசினால் அவரைக் கொலை செய்வேன் எனக் கூறும் ஜனாதிபதியின் கீழ் சிங்களவர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ முடியுமா? இவ்வாறான ஜனாதிபதியின் கீழ் இந்த நாட்டில் நீதி கிடைக்குமா?
இந்த நாட்டில் இனியும் தமிழர்கள் வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்ள வடக்கு, கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்குத் தயாராக வேண்டும்.
இதற்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்”என்றார்.