பிள்ளைகளின் கல்வியை பின்னோக்கி கொண்டு செல்ல இடமளிக்க முடியாது.
பிள்ளைகளின் கல்வியை பின்னோக்கி கொண்டு செல்லவோ இடமளிக்க முடியாது பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
முழு உலகமும் தொற்றுநோயின் அச்சத்தினால் சூழ்ந்த போதிலும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் பாடசாலை கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) தெரிவித்தார்.
சிலர் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தாலும் பிள்ளைகளின் கல்வியை தாமதப்படுத்துவதற்கோ அல்லது பின்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் 10ஆவது ஆண்டு விழாவில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 10 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்திற்கு மிகுந்த மகிழ்வுடன் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பாடசாலையை ஆரம்பித்து மிகவும் குறுகிய காலமேயாகின்றது. அந்த குறுகிய காலத்திற்குள் கல்வி மற்றும் கல்விசாரா செயற்பாடுகளிலும் திறமையை வெளிப்படுத்த இப்பாடசாலைக்கு முடிந்துள்ளது என நாம் அறிவோம். அதனால் முழு நாட்டினதும் கவனத்தை இப்பாடசாலை ஈர்த்துள்ளது.
அன்று மஹிந்த சிந்தனை நோக்கின் கீழ் இப்பாடசாலையை உருவாக்குவதற்கு பந்துல குணவர்தன உள்ளிட்ட எமக்கு முடியுமானதாயிற்று. நாடு முழுவதும் 1000 மேல்நிலை பாடசாலைகளை நிறுவுவதே அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட எமது குறிக்கோளாக விளங்கியது. அன்றைய கல்வி அமைச்சர் என்ற வகையில் பந்துல குணவர்தன அவர்கள் இத்திட்டத்திற்கு தலைமை வகித்தார்.
பிரபல பாடசாலைகள் என்ற எண்ணக்கருவினால் பாதிக்கப்பட்டிருந்த பெற்றோருக்கு இந்த எண்ணக்கரு பெரும் ஆறுதல் என்று நான் நம்புகின்றேன். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதே அனைத்து பெற்றோரதும் தேவை என்பதை அரசாங்கம் என்ற வகையில் நாம் அறிவோம்.
அப்பிள்ளைகளுக்கு கல்வியை பெறுவதற்கு பாடசாலைக்குள் வசதிகள் காணப்படல் வேண்டும்.அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகள் இன்றும் காணப்படுமாயின், அவை குறித்து ஆராயுமாறு கல்வி அமைச்சருக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம்.சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாட்டின் பிள்ளைகளுக்கு தேவையான கல்வி சீர்த்திருத்தத்தை ஏற்படுத்தியவர்கள் நாம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர்காலத்திற்காக எம்மால் செய்யப்பட வேண்டியதை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முயற்சித்து வருகின்றது. அன்று நாம் தூரப் பிரதேசங்களில் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை நிறுவும்போது சிலர் சிரித்தனர். சிலர் அரசியல் ரீதியில் அவற்றை தடுப்பதற்கு முயற்சித்தனர். இன்று பாருங்கள் பல பிள்ளைகள் அந்த ஆய்வு கூடங்கள் ஊடாக பலன் பெறுகின்றனர்.
நாம் ஆரம்பித்த உங்களது பாடசாலை, ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம் கடந்த பத்து ஆண்டுகளில் பல வெற்றிகளை பெற்றுள்ளது. அகில இலங்கை மட்டத்தில் வெற்றி பெற்ற சில பிள்ளைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களுடன் என்னை சந்திக்கவும் வருகைத் தந்தனர். சாதாரண தரம், உயர்த் தரப் பரீட்சைகளில் சித்தியடையும் வீதத்தை மிக உயர் மட்டத்தில் பேணிச் செல்வதற்கும் இப்பாடசாலைக்கு முடிந்துள்ளது.
மிகவும் கடினமான மற்றும் சவால்கள் மிகுந்த காலப்பகுதியில் கூட சாதனைகளை நிலைநாட்டியுள்ளமை சிறப்பாகும். அந்த அனைத்து சாதனைகளையும் கொண்டு இப்பாடசாலை கல்வியில் விசேட முத்திரை குத்தியுள்ளது.
ஒழுக்கமான கலாசாரம் மற்றும் சமூக சூழலில் நன்கு அறிந்த, எதிர்கால சவால்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய குழந்தைகளே இந்நாட்டிற்குத் தேவையானவர்களாகும். மாறிவரும் உலகில் இதுதான் உண்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. முழு உலகமும் தொற்றுநோயின் அச்சத்தினால் சூழ்ந்த போதிலும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் பாடசாலை கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்பாட்டை ஆரம்பித்தோம். சிலர் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தாலும் பிள்ளைகளின் கல்வியை தாமதப்படுத்துவதற்கோ அல்லது பின்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்க முடியாது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதிகளில் பிள்ளைகளின் வருகை குறைந்துள்ளது என்பதை அறிந்தேன். அத்தகைய சூழ்நிலையில், பெற்றோருக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. அது சுகாதார வழிகாட்டுதல்களின்படி குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு. அதனால்தான் விழிப்புணர்வு முக்கியமானது. பிள்ளைகளை பாதுகாக்க பாடசாலை நடவடிக்கைகளை முடிந்தவரை இயல்பாக வைத்திருப்பது முக்கியம்.
பத்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள ஹோமகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலத்தை சிறந்த நிலைக்கு கொண்டுசெல்ல பங்களிப்பு செய்த அதிபர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறித்த நிகழ்வில் பேராசிரியர் மாகம்மன பஞ்ஞானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் நிறுவுனரும் தற்போதைய வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன, போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஆர்.டீ.கசுன் குணரத்ன, பிரதி அதிபர் ஹஷிகா பெறும்புலி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.