கோட்டாவின் அரசு பழிவாங்கும் அரசே – போட்டுத் தாக்கும் தலதா

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலத்தில் பழிவாங்கல் செயற்பாடுகளைத் தவிர, நாட்டுக்குப் பயன்தரும் எந்தச் செயற்பாடுகளையும் செய்யவில்லை.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல இன்று குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வியத்மக அமைப்பினர் மீது நம்பிக்கை கொண்ட 69 இலட்சம் மக்கள் நாட்டுக்கு ஜனாதிபதி ஒருவரை தெரிவுச் செய்துள்ளனர். அதற்கான பலனை நாம் தற்போது சிறந்த முறையில் அனுபவித்து வருகின்றோம்.

கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் பாரியதொரு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும் எம்மால் அந்த வைரஸ் பரவல் நாட்டுக்குள் வரமுடியாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்பிருந்தது. எனினும், அதனை நாம் தவறவிட்டுள்ளோம்.

இந்நிலையில் நாட்டுக்குள் வைரஸ் பரவல் ஏற்படும் வரையில் அமைதி காத்துக் கொண்டிருந்து விட்டு, தற்போது எந்தவொரு பிரச்னைக்கும் வைரஸ் பரவலைக் காரணம் காட்டிக் கொண்டிருப்பதற்கு இந்த அரசுக்கு இடமளிக்க முடியாது.

நாட்டுக்காகப் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்த எங்களது ஆட்சியைத் தோல்வியடையச் செய்வதற்காகத் தற்போதைய ஆளும் தரப்பினர் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர்.

இதற்காக ‘வியத்மக’, ‘ஹெலிய’ மற்றும் ‘சிங்களே’ போன்ற அமைப்புக்களை உருவாக்கி நாட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தியிருந்தனர். நாங்கள் நாட்டின் வளங்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு எமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே அவர்கள் ஆட்சி அமைத்தார்கள். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ஒரு வெற்றியாளர் கிடையாது என்பதை முழு நாடுமே உணர்ந்து கொண்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.