தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை கையாளவே முயற்சிக்கின்றது அரசு. கஜேந்திரகுமார்.
தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை
கையாளவே முயற்சிக்கின்றது அரசு
சபையில் கஜேந்திரகுமார் எம்.பி.சீற்றம்
“முப்பது ஆண்டுகால போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காது அவர்களை வறுமைக்கோட்டின் கீழ் வைத்திருக்கவும், அடக்குமுறையைக் கையாளவுமே முயற்சிக்கின்றது.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“குருந்தூர் மலை பிரதேச இடத்தை தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது. எனினும், 1933ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது தமிழர் பகுத்து என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் இந்த இடத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனினும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியை இராணுவம் சுற்றிவளைத்து ஆக்கிரமித்துள்ளது.
இதனால் தைபொங்கல் தினத்தில் எமது தமிழர்கள் அங்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியது. கேட்டால் தொல்பொருள் திணைக்களம் இந்த இடத்தில் ஆய்வுகளைச் செய்வதாகக் கூறியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் பெளத்த தேரர் ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைத்து பெளத்த விகாரையை அமைக்க முயற்சித்தார். பின்னர் நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்து அந்த நடவடிக்கையைத் தடுத்தது.
எனினும், மீண்டும் இதே இடத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை மேற்கொள்வதாகக் கூறி விகாரை ஒன்றை அமைக்கும் முயற்சிகளை எடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இன்னமும் பொருளாதார நிலைமையில் வறுமைக்கோட்டின் கீழ் நிலையிலேயே வாழ்கின்றனர். ஏனைய மாவட்டங்களில் மக்களுடன் போட்டிபோடக்கூடிய நிலைமையில் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் இல்லை.
எனவே, எமது மக்களை இலக்கு வைத்து நடத்தும் அடக்குமுறையை அரசு நிறுத்த வேண்டும்”என்றார்.