இந்திய மீனவர்கள் உயிரிழந்தமைக்குக் கூட்டமைப்பு கண்டனம்.
அப்பாவி மீனவர்களைச் சாவடிக்காதீர்! இலங்கை கடற்படையினரின் படகு மோதி இந்திய மீனவர்கள் உயிரிழந்தமைக்குக் கூட்டமைப்பு கண்டனம்
இலங்கை கடற்படையினரின் டோறாப் படகு மோதியதில், இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
வாழ்வியலை நாடும் அப்பாவி மீனவர்களின் உயிர்களைப் பறிக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் மீனவர்களை எல்லையிலேயே தடுக்குமாறும், ஊடுருவும் மீனவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தாம் கோரி வந்தாலும், உயிரைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி இரவு காணாமல்போன இந்திய மீனவர்களின் படகுடன் இலங்கைக் கடற்படையினரின் டோறா மோதியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை இருவரினது சடலங்களும், இன்று ஏனைய இருவரினது சடலங்களும் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் உறுதியான தகவலைக் கடற்படையினர் விரைவில் கண்டறிய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
உறவுகளை இழந்து தவிக்கும் தமிழகச் சொந்தங்களுக்கும், மீனவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.