பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு முன்னெடுப்பு.
பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் – 2020 இன் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள பயிலுனர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அரச துறையில் இணைத்தல் எனும் அடிப்படையில் இன்று 18.01.2021 இன்று பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைவாகக் கற்பிப்பதற்காக 237 பட்டதாரி பயிலுனர்கள் பட்டிருப்பு கல்வி வலயத்தில் இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பக் கல்வி, தமிழ்,கணிதம், விஞ்ஞானம், நாடகமும் அரங்கியலும், வரலாறு போன்ற பாடங்களை கற்பிக்கவுள்ளனர். இவர்களுக்கான கற்பித்தல் பயிற்சிகள் எதிர்வரும் 25.01.2021 ஆம் திகதியிலிருந்து வழங்கப்படவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
பயிலுனர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை திருப்தியான முறையில் முன்னெடுத்துச் செல்லவேண்டும், மாணவர்களின் அடைவு மட்டங்களில் எதிர்பார்த்த வளர்சியினை அடையவேண்டும், இதற்காக தாங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் பாடசாலைகளில் இடம் பெறும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி மாணவர்கள் எதிர்காலத்தில் நாட்டுக்குச் சிறந்த பிரஜையாக திகழ வழிவகுக்க வேண்டும் எனவும் பயிற்சிக் காலத்தில் சிறந்த நன்னடத்தையுடன் பாடசாலை சட்டதிட்டங்களை மதித்து சிறந்தவொரு வழிகாட்டியாக தங்களை மாற்றிக் கொள்வேண்டும் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.மகேந்திரகுமார், கணக்காளர் திருமதி. எஸ்.சிவகுமாரன், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. திரு.பி.திவிதரன், முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. எம்.எச் றியாஷா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.எம்.எச்.எம்.ஜாபிர், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை அதிபர் திரு.எம்.சபேஸ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
செய்தி: சதாசிவம் நிரோசன்