ஜோ பைடன், கமலா ஹரிஸுக்கு கோட்டா, மஹிந்த, சஜித் வாழ்த்து
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
“அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். நானும் எனது அரசும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம்” என்று தனது ருவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், துணை ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றுள்ள கமலா ஹரிசுக்கும் தனியாக வாழ்த்துத் தெரிவித்துள்ள கோட்டாபய, பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளைப் பேணி ஒன்றிணைந்து செயற்பட நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று தனது ருவிட்டரில் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிய ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வாழ்த்துக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸின் நன்றி தெரிவித்துள்ளார்.
“அனைத்து இலங்கையர்களின் செழிப்பையும் உறுதி செய்வதற்காக எங்கள் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கிறோம். ஒரு ஜனநாயக, வளமான, பாதுகாப்பான இந்தோபாசிஃபிக் மற்றும் அதன் அனைத்து நாடுகளின் இறையாண்மையை உறுதி செய்வதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பு தொடரும். ஒன்றிணைந்த இரு தரப்பு இலக்குகளை நோக்கி முன்னேற உங்களது ஒத்துழைப்பை மேலும் எதிர்பார்க்கின்றோம்” எனவும் அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸின் தனது ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.