ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம் : மனோ கணேசன்.
ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம்.மனோ கணேசன்
ட்ரம்ப்பின் தோல்வி, தொழிற்படுகின்ற அமெரிக்க அமைப்பின் சிறப்பு அடையாளம். இது இலங்கைக்கு ஒரு பாடம்.
நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர, இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
அமெரிக்க ஜனநாயக தேச அமைப்பின் ஏனைய தூண்கள், “ஆம் ஐயா” (இயஸ் சேர்) என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் சரணடையவில்லை.
நீதித்துறையும், பாராளுமன்றமும், ஊடக துறையும் ஜனாதிபதி ட்ரம்பை வெளுத்து வாங்கி வெளியேற்றி உள்ளன.இன்று “ஜனாதிபதி” தோற்றுபோய் அவமானப்பட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு வென்றுள்ளது.
அமெரிக்காவின் தேர்தலை அடுத்த ஆட்சி மாற்ற குளறுபடிகளை பார்த்து, இலங்கையின் பல பேரினவாத “அறிவாளிகள்” அமெரிக்காவை எள்ளி நகையாட தொடங்கினர்.அமெரிக்காவை விட தங்களை, மிகப்பெரும் ஜனநாயகவாதிகளாக காட்ட முற்பட்டனர்.
உலகிற்கு அறிவுரை கூற அமெரிக்கா தகுதியற்றது எனக்கூறி தங்களது இனவாத அட்டூழியங்களுக்கு நியாயப்பாடுகளை தேட முற்பட்டனர்.இவர்களுக்கு, நெற்றியில் செருப்பால் அடித்ததை போல் அமெரிக்க ஜனநாயக அமைப்பு நிமிர்ந்து நிற்கிறது.
நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர, இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெளியுறவு கொள்கைகள் தொடர்பான எங்களது கருத்து முரண்பாடுகள் அப்படியே இருக்க, அமெரிக்காவின் இந்த உள்நாட்டு ஜனநாயக வெற்றியை நாம் பாராட்டுகிறோம்.
இப்போது இந்த இடைக்காலத்தில், அமெரிக்காவை விமர்சித்த இலங்கை இனவாத வீரர்களை தேடுகிறோம். காணவில்லை.