வெறி பிடித்த இனவாதிகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கோட்டாவுக்குப் பிரபல தேரர்கள் எச்சரிக்கைக் கடிதம்
இனவாத சிந்தனை கொண்ட சிலர் அரச பாதுகாப்புப் பொறிமுறையில் திரைமறைவில் செயற்பட்டு வருகின்றனர் என்று முன்னணி பௌத்த தேரர்கள் 12 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடிதம் மூலம் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக தேசிய பாதுகாப்பு மற்றும் நீதித்துறைக்கு மிகப்பெரிய அச்சறுத்தல் ஏற்படுகின்றது எனவும் அந்தக் கடிதத்தில் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதி அமைச்சர் அலி சப்ரியால் ஜனாதிபதிக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் திணைக்களத்துக்கு சட்டத்தரணிகள் 150 பேரை பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்துக்கொள்ளும் யோசனை விவகாரத்தில் தமிழ்மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவது விடயத்தில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் என்பது அரசமைப்பு முரண் மற்றும் துரோகச் செயற்பாடாகும் என்று குறிப்பிட்டுள்ள தேரர்கள், அதனை அனுமதிக்க வேண்டாம் என்கிற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மேற்படி கடிதத்தில் எல்லே குணவங்ச, பெங்கமுவே நாலக்க, முருந்தெட்டுவே ஆனந்த, ஓமாரே கஸ்ஸப்ப, அதபத்துகந்தே ஆனந்த உள்ளிட்ட பிரபல தேரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.