தமிழர் தலைநகர் திருமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

தமிழர் தலைநகர் திருமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ‘உதயன்”சுடர் ஒளி’ ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் அமையத்தில் நடைபெற்றது.

கடந்த 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை சுகிர்தராஜன் புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.

மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப அரசு முயற்சித்தபோது, இவர் எடுத்த புகைப்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக்காட்டின. இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்களை இலங்கை அரசு சந்தித்தது.

சுகிர்தராஜன் போர்ச்சூழலிலும் துணிச்சலுடன் ஊடகப் பணியாற்றியபோதே 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு அருகாமையில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பு குருமண்வெளியைப் பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை, வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், ஊடகத்துறை சமூகத்தினர் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.