புராதான இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு அனுமதி தர வேண்டும்.
புராதான இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதி தர வேண்டும் என்று சிவசேனை அமைப்பின் வன்னிமாவட்ட தலைவர் அ.மாதவன் தெரிவித்தார்.வவுனியா நொச்சிமோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். தொல்லியல் திணைக்களம் புராதன இடங்களிற்கு சென்று அங்கு பூசை வழிபாடுகளை செய்வதற்கு தடைவிதித்து வருகின்றது. நாங்கள் வெறுமனவே ஆலயங்களை மட்டும் வழிபட்டு வராமல் இங்குள்ள புராதன இடங்களையும் வழிபட்டு வருகின்றோம். அத்தோடு எமது மக்களின் நோக்கமானது நாட்டிலே சுமூகமான உறவினை மேம்படுத்தி இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக இராமாயணம், மகாபாரதம் போன்ற எங்களது இதிகாசங்கள் வாழ்வியல் முறைகளை எடுத்துக்காட்டுகின்றது.
நாங்கள் உங்களிடம் முன்வைக்கும் கோரிக்கையானது வடமாகாணத்தில் உள்ள குறிப்பாக புராதன இடமான வெடுக்குநாரி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் கைது மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது. தொல்லியல் திணைக்களமானது கொடுப்பனவை பெற்றுக்கொண்டு செயற்படுகின்றது. ஆனால் நாங்கள் மண்ணை, மரத்தை, வழிபட்டு வருவதோடு குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக வழிபட்டு வருவதன் மூலமாக நாங்கள் எந்தவித கொடுப்பனவும் இல்லாமல் இந்த புராதான இடங்களை பாதுகாத்து வருகின்றோம்.எங்களது மக்களின் சமய கலாச்சாரங்களை பார்த்தோமானால் இந்த நாட்டில் உள்ள புராதன இடங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் எங்களது கலாச்சாரம் சார்ந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்குடனே எங்களது ஆலயங்களாக இருக்கட்டும் அல்லது அமைப்புக்களாக இருக்கட்டும், பரிபாலனசபைகள் அனைத்துமே செயற்பட்டு வருகின்றது.