கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் இறுதியானது.இராணுவ தளபதி.
கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படும்
முன்னுரிமைப் பட்டியல் இறுதியானது
இராணுவத் தளபதி தெரிவிப்பு
இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் விளக்கியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்படி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முன்னணித் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும், தடுப்பூசி வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் சேமித்து வைக்கப்படவுள்ளன எனவும் அவர் கூறினார்.
அதன்பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவின் கீழ் உள்ள பணிக்குழு தடுப்பூசியை வழங்குவதற்கான நிலையங்களுக்குக் கொண்டு செல்வது மற்றும் சேமிப்பது தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் கையாளும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அத்துடன் தடுப்பூசிகளைக் களஞ்சியப்படுத்துவதற்கு ஏதுவான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான இடங்களுக்குத் தேவையானோர் வரவழைக்கப்பட்டு அவ்விடங்களிலேயே தடுப்பூசி வழங்கப்படும். மாறாக ஒவ்வொரு இடங்களுக்கும் எடுத்துச் சென்று தடுப்பூசி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் கூறினார்.