விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம்.
விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம்
வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக அழைப்பு.
வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ள இந்தப் போராட்டம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் இன்று விடுத்துள்ள அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
வடக்கு, கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
வடக்கு, கிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். ஆனால், தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை யாவரும் அறிவோம் .
போர் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளில் வடக்கு, கிழக்கை இராணுவ மையமாக்கி வரும் இலங்கை அரசு தமிழ் மக்களின் கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு, கிழக்கு பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காகப் பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்த மயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
வடக்கு, கிழக்கில் குருந்தூர்மலை ஐயனார் கோயில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில், நிலாவரை ஆகியவற்றுடன் கிழக்கில் கன்னியா பிள்ளையார் கோயில், முருகன் ஆலயம், வேற்றுச்சேனை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் தமது பாரம்பரிய, கலாசார, சமய, வழிபாடுகளைச் செய்ய முடியாதவாறு ஆலயங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
மேலும் வடக்கு, கிழக்கில் உள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான செயல்கள், செயற்பாட்டாளர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்களக் குடியேற்றங்களும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பில் உள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக காடுகள் அழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாஸாக்களைப் புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராகப் போராடும் முஸ்லிம் சமூகத்தையும் அரச தரப்பினர் அடக்கி ஆள முனைகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பலதரப்பட்ட இஸ்லாமிய மக்களைப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தடுத்துவைத்துள்ளனர். இதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைதுசெய்து பல வருடங்களாகத் தடுத்து வைத்துள்ளனர்.
இதேபோன்று சிறைகளில் விசாரணைகள் இன்றி தமிழ் அரசியல் கைதிகளாகப் பலர் உள்ளனர். ஆனால், பல குற்றவாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசு, இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருகிறது.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட் உறவுகளைத் தேடி வருடக்கணக்கில் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான நீதியை வழங்காது அரசு ஏமாற்றி வருகின்றது.
அத்துடன் மலையகத் தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்துக்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசு இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.
இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வடக்கு- கிழக்கு தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை
நிறைவேற்றக் கோரியும் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எமது அவலக் குரல்கள் சர்வதேசத்தின் மனச்சாட்சிகளைத் தட்டும் அளவுக்கு எமது போராட்டத்தை அஹிம்சை வழியில் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ள மேற்படி போராட்டத்துக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
எனவே, அரசியல் கட்சிகள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைவரும் மேற்படி போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி கலந்துகொள்ளுமாறு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.
– இங்ஙனம்
வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகள்.
* வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
* அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம் – கிளிநொச்சி.
* கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீட மாணவர் ஒன்றியம்
* யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
* அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு
* சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம்
* தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் – மட்டக்களப்பு
* மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு – மட்டக்களப்பு
* மட்டக்களப்பு மாவட்ட பல் சமயங்களின் ஒன்றியம்
* மட்டக்களப்பு மாவட்ட முதியோர் அமைப்புக்களின் சம்மேளனம்
* தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு – மட்டக்களப்பு
* வெண்மயில் அமைப்பு – மட்டக்களப்பு
* தயா நிலம் அறக்கட்டளை – யாழ்ப்பாணம்
* குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் – முல்லைத்தீவு
* வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் – வவுனியா வடக்கு
* சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளனம் – கிளிநொச்சி
* ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் – வேற்றுச்சேனை, வெல்லாவெளி, மட்டக்களப்பு
* தென்கைலை ஆதீனம், கன்னியா, திருகோணமலை
* தமிழர் மரபுரிமை பேரவை – முல்லைத்தீவு.