ஆயிரம் ரூபா சம்பள உயர்வு எதிர்கட்சியினருக்கு சாட்டையடி.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு எதிர்கட்சியினருக்கு சாட்டையடி.
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவது தொடர்பில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நகையாடிய எதிர்கட்சியினருக்கு அமைச்சரவையின் தீர்மானம் ஒரு சாட்டையடி என இலங்கை கம்னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மோகன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நேற்று (27) அவரது அலுவலகத்தில் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் கடந்த பல வருடகாலமாக பல்வேறு விதமாக சுமூக நிலைமைக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு இருந்தது. கடந்த நல்லாட்சி அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா கூட பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் கடந்த தேர்தலின் போது ஜனாதிபதியும் பிரதமரும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள்.
அதன் அடிப்படையில் கடந்த வரவு செலவு திட்டத்தின் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய உறுப்பினர்களும் இதை நடக்க முடியாத ஒரு காரியமாக சித்தரித்தார்கள்.இது ஏமாற்று வித்தை கூலி போராட்டம் என்றெல்லாம் வர்ணித்தார்கள்.இதை பலர் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கொச்சைப்படுத்தினார்கள்.அவர்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கின்ற வகையிலேயே அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை வீடமைப்புக்காக தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏழு பேர்சஸ் காணி வழங்கப்பட்டு வந்தது.
அதனை 10 பேர்சஸ் காணியாக உயர்த்தி அதில் வீடும் தங்களது வருமானத்தினை உயர்த்தி கொள்ளுகின்ற வகையில் கால் நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நல்ல சூழலை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்கு முன்னின்று உழைத்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் நிறைவேற்றுவதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் இலங்கை கொமினிஸ் கட்சி சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே நேரம் தோட்டத்தொழிலாளர்களுக்காக கட்டப்படவுள்ள வீடுகளில் இரண்டு மாடிக்கான அடித்தளம் இடப்படுகின்றது.ஒரு தளத்தினை அரசாங்கம் கட்டிக்கொடுக்கின்றது. அதில் உங்களுக்கு வசதியான நேரத்தில் மேல் மாடியினை கட்டுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.