தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு.
வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு.
வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 27/01/2021 இடம்பெற்றது.
இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், பிரதி பிரதம செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், தொழில்நுட்ப சேவையின் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தொழில்நுட்ப சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்கிவைத்து கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், இவ்வெற்றிடங்களையெல்லாம் துரிதமாக நிரப்புவதற்குரிய அதிகாரங்களை குறித்த மாகாண ஆளுநருக்கு வழங்கிய மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு அனைவரும் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும் என்று தெரிவித்தார். அந்தவகையில் வடமாகாணத்தின் அபிவிருத்தி உட்கட்டமைப்புக்கு தடையாக இருந்துவந்த இவ்வெற்றிடங்கள் அனைத்தும் இன்றுடன் முழுமையாக நிரப்பப்படுகிறது.
எனவே நிறுவன உட்கட்டமைப்பு நடவடிக்கையில் முக்கிய அம்சமாகவுள்ள தரம்(quality) என்ற விடயத்தை கண்காணிக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நீங்கள் அனைவரும் உங்களது கடமைகளை செம்மையாக நிறைவேற்ற வேண்டும். தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் ஒரு சிறு தவறு கூட பின்னர் பாரிய உயிரிழப்புக்கள் மற்றும் அனர்த்தங்களை ஏற்படுத்தும். எனவே நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் வடமாகாண சபையின் சிறந்த ஆசானாக விளங்கும் பிரதம செயலாளரின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்படும் உள்ளக பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் என்பவற்றை கற்று இம்மாகாணத்திற்கு சிறந்த உத்தியோகத்தர்களாக செயற்பட வேண்டுமெனவும், தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தங்களது சேவைக்காலத்தில் பதவியுயர்வு பெற்று அவர்களது சேவைகள் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.