அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் – கோட்டா அரசு திட்டவட்டம்
“ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது.”
– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
‘இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கும். ஆட்சி மாறினாலும் அமெரிக்காவின் கொள்கைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாது’ என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் தற்போதைய ஆட்சியில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசு வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.
அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி வந்தது.
இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இலங்கை மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இலங்கையின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும். இலங்கையும் தமது நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெளிவாக எடுத்துரைக்கும்” – என்றார்.