இலங்கையில் 5,286 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இன்றையதினம் (29) 5,286 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (29) இராணுவத்தின் மூவருக்கு வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதோடு, மேல் மாகாணத்தில் 10 மையங்களில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சுகாதார பிரிவு ஊழியர்கள் மற்றும் கொவிட்-19 ஒழிப்பில் முன்னணியில் நின்று செயற்படும் ஊழியர்களுக்கு, முதற் கட்டமாக முதலாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் 1,000 தடுப்பூசிகள் இதுவரை இராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்ததோடு, எதிர்வரும் 4 நாட்களுக்குள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 31,000 தடுப்பூசி டோஸ்களை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாளை (30) சனிக்கிழமை, 7,500 தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மன்னார், வவுனியா, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், மின்னேரியா ஆகிய பிரதேசங்களில் இராணுவ வைத்தியசாலைகள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் ஊடாக வழங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1,886 பேருக்கும், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 803 பேருக்கும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் 781 பேருக்கும், இராணுவ வைத்தியசாலையில் 600 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.
அத்துடன், பனாகொட இராணுவ முகாமில் 400 பேருக்கும், லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் 382 பேருக்கும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 190 பேருக்கும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 108 பேருக்கும், தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) 80 பேருக்கும், வெலிசறை கடற்படை முகாமில் 56 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதாக, தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்பூசி வழங்கப்பட்ட எவருக்கும் இதுவரை எந்தவொரு ஒவ்வாமைகளும் பதிவாகவில்லை எனத் தெரிவித்துள்ள குறித்த பிரிவு, நாளை (30) இந்நடவடிக்கை நாடு முழுவதும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.