அரச காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழப்பு.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களிக்காடு எனப்படும் அரச காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
யானை உயிரிழந்து சுமார் 15 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்தே யானை அடையாளம் காணப்பட்டுள்ளது.
யானையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த அடையாளம் யானையின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்ட தடையங்கள் காணப்படுவதை தொடர்ந்து யானை உயிரிழப்பு குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
இது குறித்து முள்ளியவளை பொலிசாரும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படும் மாவட்டமாக முல்லைத்தீவு காணப்பட்டாலும் அரச காட்டுப்பகுதியில் யானை உயிரிழந்து கிடப்பது சட்டவிரோத துப்பாக்கி தாரிகளின் செயற்பாடாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.