உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.
யாழ்ப்பாணம் உயர் குருதி அமுக்க சிகிச்சை நிலையம் (Jaffna Heypertension Centre)யாழ் போதனா வைத்தியசாலையில் 29.01.2021 திறந்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விக்டோரியா வீதியில் உள்ள புதிய கிளினிக் கட்டடத் தொகுதியில் இந்த சிகிச்சை நிலையம் வெள்ளிக்கிழமை நண்பகல் திறந்து வைக்கபட்டது.
இருதய சிகிச்சை வல்லுநர் பூ.லக்ஸ்மன் இந்த சிகிச்சை நிலையத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி, சிகிச்சை நிலையத்தின் முதல் பணிப்பாளர், பொது மருத்துவ வல்லுநர், பேராசிரியர் தி.குமணன் மற்றும் துறைசார் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவப் பிரிவு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, அகஞ்சுரக்கும் தொகுதிப் பிரிவு ஆகியவை இணைந்து யாழ்ப்பாணம் உயர் குருதி அமுக்க சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை நிலையத்தின் முதல் பணிப்பாளராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர், பொது மருத்துவ வல்லுநர் திருநாவுக்கரசு குமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிதீவிரமான குருதி அமுக்கம், இளவயதில் குருதி அமுக்கம் போன்ற சிறப்புக் கவனிப்பு தேவையுள்ள நோயாளிகள் இந்த சிகிச்சை பிரிவினால் சிகிச்சையளிக்கப்படுவார்கள்.
அத்தோடு இந்த சிகிச்சை நிலையம் ஊடாக மக்களுக்கு உயர் குருதியமுக்கம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஆராய்ச்சிப் பணிகளையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.