விஜய் – அஜித் ரசிகர்கள் கடும் மோதல் : மாஸ்டர் படத்தில் அஜித்தை இழிவுபடுத்தும் போஸ்டர்?
நடிகர் அஜித்தின் பெயரை தங்களின் லாபத்திற்காக இழிவுபடுத்துகிறார்கள் என்று கூறி, சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி பொங்கல் விடுமுறையில் திரை அரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும் திரை அரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. சில திரையரங்குகள் 100% இருக்கைக்கு அனுமதி அளித்ததாக புகார்களும் எழுந்தன. அந்த திரையரங்குகளுக்கு போலீசார் அபராதமும் விதித்து இருந்தனர். ஆனாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.
உலகம் முழுவதும் வெளியாகி இருந்த மாஸ்டர் திரைப்படம், வசூலில் பல்லுவேறு சாதனைகளை படைத்ததாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, நேற்று (வெள்ளிக்கிழமை) பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. அதோடு படம் வெளியான சில மணி நேரங்களிலேயே பைரசியிலும் வெளி வந்தது. மீம் கிரியேட்டர்கள் படத்தின் லிங்க் வேண்டுமா என்று மீம் பக்கங்கள் வழியாக கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள். இதையடுத்து நடிகர் விஜயின் ரசிகர்கள் பைரசியில் படம் பார்க்கக் கூடாது என்று மீம் பக்கங்களை டாக் செய்து கொண்டும், ஒருவரையொருவர் திட்டிக் கொண்டும் இருந்தனர்.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் முதல் பாகத்தில் விஜய் மது விரும்பி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரிடம் ஏன் இப்படி மது அருந்துகிறீர்கள் என்று கேட்போரிடம் எல்லாம் தமிழ் சினிமாவில் வெளி வந்த திரைப்படங்களின் கதையை கூறுவார். அதில் நடிகர் அஜித் படங்களில் ஒன்றான காதல் கோட்டை திரைப்படத்தின் கதையையும் கூறியிருப்பார். அதோடு மாஸ்டர் படத்தின் சண்டைக்காட்சியில் “அஜித் குதித்தார் ஜவ்வு கிழிந்தது” என்ற சுவரொட்டி ஒரு டீ கையில் ஒட்டப்பட்டிருக்கும். இதைக் கையில் எடுத்த அஜித் ரசிகர்கள், நடிகர் அஜித்தின் பெயரை தங்களின் லாபத்திற்காக இழிவுபடுத்துகிறார்கள் என்று கூறி, சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வந்தனர்.
இதையடுத்து யூ டூப் தளத்தில் திரைப்படங்களுக்கு ரிவியூ அளித்து வரும் பிரசாந்த், “விஜய் அண்ணா காதல் கோட்டை படத்தின் கதையை மாஸ்டர் படத்தில் அழகாக கூறியிருகிறார். நடிகர் அஜித்தின் பெயரை இழிவுபடுத்தும் விதமாக ஏதும் பேசவில்லை. சண்டைக்காட்சியில் இடம் பெரும் அந்த சுவரொட்டியை அவர் பார்த்துக் கூட இருக்கமாட்டார். அந்த படத்தின் உதவி இயக்குனர் யாராவது அதை அங்கு ஒட்டியிருப்பர். இதையெல்லாம் இக்னோர் செய்து கடந்து போக வேண்டும்“ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.