கமலா ஹாரிஸ் குறித்த கேள்வி : ப்ரியங்காவிடம் ”பல்ப்” வாங்கிய ஒருங்கிணைப்பாளர்!
இந்தியாவில் பிரதமர் முதல் குடியரசு தலைவர்கள் வரை நிறைய பெண் ஆளுமைகளை பார்த்துவிட்டோம். “வெல்கம் டூ தி க்ளப், அமெரிக்கா” என்றும் பேச்சு.
தான் நடித்த தி ஒய்ட் டைகர் படத்தின் ப்ரோமோவிற்காக தி லேட் ஷோ வித் ஸ்டீஃபன் கொல்பெர்ட் என்ற நிகழ்வில் பங்கேற்றார் முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ரா. அப்போது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீஃபன் கொல்பெர்ட், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். முதல் தெற்காசிய, முதல் ஆப்பிரிக்க, முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றிருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன என்றார்.
அதற்கு பதில் அளித்த நடிகை ப்ரியங்கா சோப்ரா, ”கமலா ஹாரிஸ் வெற்றி அடைந்தது குறித்து என் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இந்தியா போன்ற நாட்டில் இருந்து வந்திருப்பதால் நான் கூறுகிறேன், அங்கு ஏற்கனவே பிரதமர் முதல் நாட்டின் குடியரசு தலைவர்கள் வரை பல்வேறு முக்கிய பொறுப்புகளை பெண்கள் வகித்து வந்திருக்கின்றனர். எனவே, இந்த பட்டியலில் இணைந்து கொள்ளுங்கள், அமெரிக்கா” என்று அவர் பதில் அளித்தார். அவருடைய இந்த பதில் நெட்டிசன்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதை விட சிறப்பாக யாரும் இது குறித்து கூறிவிட இயலாது என்றும் பலர் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.