இரு நாள்களுக்குள் தீர்வு இல்லையேல் தொடர் போராட்டம்! – கோட்டா அரசுக்கு 85 தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
“கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்க முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு அரசு இரு நாள்களுக்குள் தீர்வை அரசு வழங்க வேண்டும். இல்லாவிடின் 85 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்துத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.”
– இவ்வாறு துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன எச்சரிக்கை விடுத்தார்.
துறைமுக ஊழியர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்க அசுடன் பேச்சுகளை முன்னெடுப்பது பயனற்றது. கிழக்கு முனையத்தைத் துறைமுக அதிகார சபை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள பட்சத்தில் அரசு கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அதிக அக்கறை கொண்டுள்ளது.
கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜனாதிபதி தொழிற்ங்கத்தினரிடம் தெளிவாகவும், உறுதியாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு முனையம் தொடர்பில் துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட எழுவர் அடங்கிய குழுவின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது. குழுவினர் அரசுக்குச் சார்பாகவே அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
குழுவினர் எதிர்வரும் அமைச்சரவையில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் அரசின் செயற்பாட்டைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக அபிவிருத்தி செய்ய வேணடும் எனத் தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கையை மீளப் பெற்று, கொழும்புத் துறைமுகத்தின் மேல் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணியை இந்திய நிறுவனத்துக்கு வழங்குமாறு துறைமுக தொழிற்சங்கத்தினர் ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடுக்க வேண்டும் என அரச தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எம்மால் ஏற்க முடியாது.
கொழும்புத் துறைமுகம் தொடர்பில் துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இரண்டு நாள்களுக்குள் தீர்வை அரசு வழங்க வேண்டும். இல்லாவிடின் 85 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நாடு தழுவிய ரீதியில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” – என்றார்.