தமிழா! நீ தமிழா? : சுவிசிலிருந்து சண் தவராஜா
தமிழா! நீ தமிழா?
நாம் தமிழராய்….? எனும்
ஆரம்பத்தை பார்த்துவிட்டு சி.பா. ஆதித்தனார் பற்றியோ ‘ஆமைக் கறி புகழ்’ சீமான் பற்றியோ எழுதப் போகிறேன் என நினைத்து விடாதீர்கள்.
இது வேறு விடயம் பற்றியது.
“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு. அமிழ்தம் அவனுடை மொழியாகும், அன்பே அவனுடை வழியாகும்” என நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பாடினார்.
தமிழர் என்பதற்கான வரையறை என்ன?
ஒருவரைத் தமிழர் என வரையறுப்பது எதனைக் அடிப்படையாகக் கொண்டு என்ற கேள்வியை எழுப்பினால் முறையான பதிலைக் கண்டு கொள்வது கடினமாகவே இருக்கும் என நம்பலாம்.
தாய்மொழியாகத் தமிழைக் கொண்டவர்களைத் தமிழர் என அழைக்கலாமா? அப்படியானால் தமிழ் பேசும் இஸ்லாமியர்களை ஏன் தமிழர் என நாம் ஏற்றுக் கொள்வதில்லை? அப்படியானால் பின்பற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர் என்ற வரையறை ஆக்கப்பட்டுள்ளதா? அப்படி இருந்தாலும், இந்த வரையறைக்குள் இந்துக்களோடு, கிறிஸ்தவர்களும், மத நம்பிக்கை அற்றவர்களும் கூட அடக்கப்படுகின்றனரே? அப்படியானால் தமிழர் என வரையறை செய்வதற்கான அடிப்படைதான் என்ன?
தமிழர்கள் என்று நாம் வரையறை செய்துள்ள மக்கட் கூட்டம் சமத்துவமான ஒரு திரட்சியா என்றால் அதுவும் இல்லை. மத அடிப்படையிலான பிளவுகள், சாதீய அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் என்பவற்றை நாம் கொண்டிருக்கிறோம். தமிழர்களில் இந்துக்களும், உயர்குடி எனத் தம்மைக் கருதும் வேளாளர்களும் தாம் உயர் நிலையில் இருப்பதாக நினைக்கின்றனர். அவ்வாறே நடந்தும் கொள்கின்றனர். எமது சமூகக் கட்டமைப்பு அவ்வாறே வடிவமைக்கப்பட்டும் உள்ளது. இந்த ‘உயர் நிலையை’ ஏனையோர் ஏற்றுக் கொண்டுள்ளனரா? அங்கீகரித்து உள்ளனரா?
எதற்காக இந்த ஆராய்ச்சி?
இப்போது எதற்கு இந்த ஆராய்ச்சி எனச் சிலர் நினைக்கக் கூடும். எந்தவொரு பிரச்சனைக்கான தீர்வும் அடிப்படையில் பிரச்சனையைத் தெளிவாக விளங்கிக் கொள்வதிலேயே தங்கியிருக்கின்றது. ஆகவே, தமிழ் மக்களின் விடுதலை பற்றி உரக்கப் பேசுவோர் தமிழர் என்பவர் யார் என்பதை வரையறை செய்து கொள்வதுடன், குறித்த சமூகத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளையும் அறிந்தவர்களாக இருக்கவும் வேண்டும்.
தமிழர்கள் எனச் சுட்டப்படுவோர் யார் என்பது குறித்து ஆராய்ச்சி செய்வது எனது நோக்கமல்ல. மாறாக, அப்படித் தமிழர் எனத் தம்மை அழைத்துக் கொள்வோர் தம் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள பிம்பம் தெளிவற்றது, ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது என்பதை எடுத்துரைப்பதே எனது நோக்கம்.
“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்” என்கின்ற சொலவடையைக் காலங் காலமாகப் பாவித்து வருபவர்கள் தமிழர்கள். ஆகவே, மேலே நான் சொன்ன விடயங்களையும் அந்த அடிப்படையில் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் என்பது எனது அவா.
மத போதகரின் மரணமும் எம்மவரின் அணுகுமுறையும்
அண்மையில் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்க் கிறிஸ்தவப் போதகர் ஒருவர் மரணமடைந்த செய்தியைப் பலரும் அறிவர். கடந்த வருட ஆரம்பத்தில் அவர் ஒரு வகையில் பிரபலம் அடைந்திருந்தார். சரியாகச் சொல்வதானால் தமிழ் ஊடகங்களால் பிரபலம் ஆக்கப்பட்டு இருந்தார். கொரோனாக் கொள்ளை நோய் தீவிரம் பெறத் தொடங்கிய மார்ச் மாதமளவில் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர் அங்குள்ள ஒரு சிலருக்குக் கொரோனாத் தொற்றை ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியை அறிக்கையிட்ட தமிழ் ஊடகங்கள் பலவும் குறித்த போதகர் திட்டமிட்டே கொரோனாத் தீநுண்மியை மற்றவர்களுக்குப் பரப்பினார் என்ற தொனிப்பட செய்திகளை வழங்கியிருந்தன. ஒரு கட்டத்தில், சம்பந்தப்பட்ட போதகர் ஊடகங்களில் தோன்றித் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய சூழலை குறித்த செய்தி அளிக்கைகள் அவருக்கு ஏற்படுத்தியிருந்தன.
‘இந்துக்களே தமிழர்கள்’ எனக் கருதும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கிறிஸ்தவ சமயம் மீதான தமது காழ்ப்புணர்வை குறிப்பாகச் சொல்வதானால் கிறிஸ்தவ சமய மதமாற்றத்துக்கு எதிரான தமது வெறுப்பை வெளிக்காட்டும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்தச் செய்தியைப் பயன்படுத்திக் கொண்டனர். தமது வக்கிரப் போக்கை குறித்த போதகரின் மரணத்தின் போதும் வெளிப்படுத்திக் கொள்ள இந்த ஊடகங்கள் தவறவில்லை.
இதே ஊடகங்கள் இந்து ஆலயங்கள், வழிபாட்டு மையங்கள் மூலம் கொரோனா பரவியதையோ, அவை மூடப்பட்டு இருந்ததான செய்திகளையே அறிக்கையிடுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
ஊடகங்கள் மாத்திரமன்றி, பல தனிநபர்களும் குறித்த போதகரின் மரணம் தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதைப் பார்த்த போதில் “யார் தமிழர்?” என்ற கேள்வி மனதில் உதித்தது.
யார் தமிழர்?
இன விடுதலைக்காகப் போராடிய ஒரு இனம், தற்போதும் போராடிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் ஒரு இனம், தனது இனத்துக்குள்ளேயே அடங்கும் ஒருவரின் மரணத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது எத்தகைய உளவியல்?
ஏற்கனவே முஸ்லிம்கள் தொடர்பிலும் ஒரு தெளிவான கருத்து அற்றவர்களாகத்தான் ஈழத் தமிழர்களில் அநேகர் – அரசியல்வாதிகள் உட்பட – உள்ளனர். முஸ்லிம்கள் தங்களைத் தனியான இனம் என்று பிரகடனம் செய்த பின்னரும் இல்லையில்லை அவர்கள் ‘தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்’ எனக் கூறித் தங்களோடு கூட்டத்தைச் சேர்த்துக் கொள்ள முயலும் அதேவேளை முஸ்லிம் வெறுப்பை அவ்வப்போது உமிழ்வதற்கும் மறப்பதில்லை.
தான் விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றும் உரிமை உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதனைத் தடுக்கின்ற உரிமை யாருக்கும் இல்லை எனப் அரங்கத்தில் பறைசாற்றிக் கொண்டு அந்தரங்கத்தில் மத வெறுப்பைக் கக்கிக் கொள்பவர்களே அநேகர். இந்து மதம் என ஆங்கிலேயன் கண்டு பிடித்த மதத்தில் இருந்து பல்வேறு பாரபட்சம், தீண்டாமைக் கொடுமைகள் என்பவற்றில் இருந்து விடுபட வெளியேறி ஏனைய மதங்களில் இணைபவர்களைத் தடுத்து நிறுத்த வழியற்ற இவர்களே ஏனைய மதத்தவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியைக் கக்குகின்றனர். உண்மையிலேயே இத்தகைய கருத்தைக் கொண்டவர்கள் மதம் மாறுபவர்களின் உண்மையான பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வு காண முயலவேண்டும்.
சாதியத்தின் கோர முகம்
சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் சாதியத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப் பட்டுள்ளது. இந்து மதத்தில் இருந்து சனாதனத்தைத் தனியே பிரித்தெடுக்க முடியாத சூழலில் சாதியத்தை விட்டொழிப்பது முடியாத காரியமாகின்றது. இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கின்றார்கள் என அப்பாவித்தனமாக(?) கதைப்பவர்கள் இன்றைய காலகட்டங்களிலும் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியாகும் மணமகன் தேவை, மணமகள் தேவை விளம்பரங்களைப் பார்த்தே உண்மை நிலையைப் புரிந்து கொள்ளலாம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தகுந்த இணையரைத் தேடுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், துயரத்தையும் அவர்களோடு பழகிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
பண்பாடு என்ற சொல்லாடல் ஊடாகக் கதை சொல்லும் பலரும், நாம் காலங்காலமாக எமது பண்பாடு எனக் கொண்டாடிய பல பண்புகளை காலச் சூழல் கருதி விட்டொழித்திருக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்ள முன்வருவதில்லை. பண்பாடு என்பதே காலத்துக்கு ஏற்றதான பண்பாட்டைக் கொண்டதே என்பதை அவர்கள் அங்கீகரிக்க முனைவதில்லை. சாதியம் என்பதுவும் அத்தகைய ஒன்றே.
புலம் பெயர் சமூகத்தில் தீண்டாமை
புலம் பெயர் சமூகத்திலும் சாதியக் கொடுமைகள், புறக்கணிப்புகள், அவமரியாதைச் சம்பவங்கள் இல்லாமல் இல்லை. எடுத்துக் காட்டாக நான் கண்ட, கேள்விப்பட்ட ஒரு சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
வழக்கமாக தனது குடும்பத்தவர்கள் மற்றும் ஊரைச் சேர்ந்தவர்களின் நிகழ்வுகள் யாவற்றிலும் கலந்து கொள்ளும் ஒருவர். கலந்து கொள்வது மட்டுமன்றி மேடையில் தோன்றி நிகழ்வைக் கலகலப்பாக்குவதிலும் வல்லவர். ஒரு குறித்த திருமண நிகழ்வில் தான் கலந்து கொள்ளவில்லை எனக் கூறியபோது நான் ஆச்சரியப்பட்டேன். காரணத்தைக் கேட்டபோது தமது உறவினரான மணமகன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாகவும் அதனைத் தான் விரும்பவில்லை எனவும் கூறினார். அது மாத்திரமன்றி, நிகழ்வுக்குச் சென்றால் மணமகளின் உறவினர்களோடு சரிசமமாக நிற்க வேண்டி வரும் அதனைத் தவிர்க்கவே தான் திருமண நிகழ்வைப் புறக்கணித்ததாகவும் அவர் கூறினார். இத்தகைய நோக்கத்தில் குறித்த நிகழ்வைப் புறக்கணித்தவர்கள் பலர்.
மற்றொரு சம்பவத்தில் பொது மன்றமொன்றில் சேர்ந்து பணியாற்றிய ஒரு இளைஞனும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதல் வயப்பட்டார்கள். பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் பெற்றோருடைய சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், திருமண நிகழ்விலோ அன்றி வரவேற்பிலோ மருந்துக்குக் கூட ஒரு பிராமணரும் சமூகமாகி இருக்கவில்லை. வழக்கத்தில் முற்போக்குப் பேசும் ஓரிருவர் கூடக் காணப்படவில்லை.
இதுபோன்ற பல எடுத்துக் காட்டுகளை முன்வைக்க முடியும். இன்று புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் பல்வேறு மண முறிவுகளின் பின்னும் குடும்ப வன்முறைகளின் பின்னும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன என்பதை நுணுக்கமாக ஆய்ந்து பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்.
மூளைச் சலவைக்கு ஆளாகும் இளைய தலைமுறை
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பாட்டைக் கொண்ட தமிழர்கள் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இது போன்ற இழிவுகளைக் காவிக் கொண்டிருக்கப் போகின்றார்கள்?
ஐரோப்பியத் திறந்த கலாசாரத்தின் மத்தியில் வாழும் இரண்டாவது தலைமுறையினர் தமிழ் மக்களின் மத்தியில் உள்ள இத்தகைய உளுத்துப் போன பண்பாடுகளைப் பற்றி அறியாமல், அல்லது அவை பற்றிய கரிசனை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அந்த இளைய தலைமுறையினரைக் கூட மூளைச் சலவை செய்துவிட ஒருசில பெற்றோர்களும், உறவினர்களும் அரும்பாடு படுவதைக் காண முடிகின்றது. இதனால் மனக் குழப்பத்துக்கு ஆளாகும் பிள்ளைகள் பெற்றோருடனான உறவை முறித்துக் கொள்கின்றனர் அல்லது மனநோய்களுக்கு ஆட்பட்டு விபரீத முடிவுகளை நோக்கிச் செல்கின்றனர்.
உலக மாந்தரிடம் பேதங்கள் இல்லாமல் இல்லை. மொழி வாரியாக, இன வாரியாக, மத வாரியாக, தேசங்களின் அடிப்படையில் அவர்கள் பிரிந்தே இருக்கிறார்கள். ஆனால், தமிழ்ச் சமூகத்தைப் போன்று பல்வேறு சமத்துவமற்ற கூறுகளாக அவர்கள் பிரிந்திருக்கவில்லை. சாதியம் என்ற விடயத்தை ஐரோப்பியர்களுக்குப் புரிய வைப்பதில் எடுத்துக் காட்டக் கூடிய ஒரு விடயம் கூட அவர்கள் சமூகத்தில் இல்லை என்பதே நாம் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை உணர்த்தப் போதுமானது.
ஐரோப்பாவில் கூட தொழிற் பிரிவினை உள்ளதுதானே அது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா என அப்பாவிகள் போன்று ஆனால் வஞ்சக எண்ணத்தோடு கேள்விக் கணை வீசுபவர்கள் பலர் உள்ளனர். ஐரோப்பாவில் தொழிற் பிரிவினை உள்ளது உண்மைதான். ஆனால், அதில் பாரபட்சம் இல்லை. ஒருவரை விட மற்றவர் கீழானவர் என்ற படிநிலை இல்லை. குறிப்பாகத் தீண்டாமை இல்லவே இல்லை. மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மக்களைத் தரம் பிரிப்பதில்லை. மத நம்பிக்கை கொண்டவர்களை மட்டுமன்றி மத நம்பிக்கை இல்லாதவர்களைக் கூட சமமாகவே மதிக்கும் பண்பு அவர்களிடம் உள்ளது.
இத்தகைய, காலத்துக்கு ஒவ்வாத பண்புகள் தமிழர்கள் இடத்திலும், இந்தியர்களிடமும் மாத்திரமே உள்ளன.
இப்போழுது மீண்டும் கேட்கிறேன்.
தமிழர்கள் யார்?
இத்தனை பாகுபாடுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் கொண்ட நம்மில் யார் தமிழர்கள்?