இலங்கை அணி வீரர்களின் சம்பளங்களை குறைப்பது தொடர்பாக கவனம் செலுத்தபடவுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு குறையவுள்ள சம்பளம்!
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கான சம்பளங்கள் பாரியளவில் குறைப்பது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கட் கவனம் செலுத்தி வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலமாக இலங்கை கிரிக்கட் அணி வீரர்களின் திறமை வெளிப்பாடு குறித்து பல்வேறு தரப்புக்களும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இலங்கை அணி மிக மோசமாக தோல்விகளைத் தழுவியிருந்தது.
இந்த நிலையில் அணி வீரர்களின் சம்பளங்களை 40 வீதத்தில் குறைப்பது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கட் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது
வீரர்களின் திறமை அடிப்படையில் சம்பளங்கள் வழங்குவது குறித்த யோசனைத் திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நமால் ராஜபக்ச முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஒப்பந்த அடிப்படையில் முதல் நிலை வகிக்கும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு கொடுப்பனவு தொகை 120000 டொலர்களிலிருந்து 70000 டொலர்களாக குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக 7500 டொலர்களும், ஒருநாள் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக 4000 டொலர்களும் மற்றும் டுவன்ரி20 போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக 2000 டொலர்களும் தற்பொழுது வழங்கப்படுகின்றது.
இந்த தொகைகளையும் குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போட்டியொன்றில் வெற்றியீட்டினால் கொடுப்பனவு தொகையை இரட்டிப்பாக வழங்கும் நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்