இலங்கையின் நிலைப்பாட்டை ஜெனிவாவில் வெளிப்படுத்த புதிய பிரேரணையே வேண்டும்.
இலங்கையின் நிலைப்பாட்டை ஜெனிவாவில்
வெளிப்படுத்த புதிய பிரேரணையே வேண்டும்
கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்து
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை இலங்கை அரசு களைவதற்கு, போர் நிறைவின் பின்னரான படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் முதல் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக நீதிபதி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு வரையிலான உள்ளகச் செயற்பாடுகளை குறிப்பிட்டுக் கூறும் புதிய பிரேரணையொன்றே தற்போதைய சூழலில் அவசியமாக உள்ளது.”
இவ்வாறு சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி. பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையை சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டிருக்கின்றார். இதனை எதிர்வரும் 24ஆம் திகதி ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்தநிலையில் அவர் இம்முறை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலில் சிவில் நிர்வாகத்தில் 28 படை அதிகாரங்களை இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் கூறியுள்ளார்.
அத்துடன், 20ஆவது திருத்தச் சட்டத்தால் ஏற்பட்டுள்ள அதிகாரக் குவிப்பு மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமல் போனமை, அரசமைப்பில் உள்ள உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமை, இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமை, விசேடமாக கலப்புபொறிமுறையுடான நீதி விசாரணை முன்னெடுக்கப்படாமை ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றில் இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை கடந்த காலங்களில் வெளியான அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானதுதான். இதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். இல்லாது விட்டால் கொரோனா நெருக்கடியையும் விடவும் மிகவும் ஆபத்தான நெருக்கடிக்கு முகங்கொடுக வேண்டிய நிலைமைகள் உருவாகி விடும்.
இலங்கையில் நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்புதலில் காணப்பட்ட குறைகளை அடிப்படையாக வைத்தே இந்தக் குற்றச்சாட்டுக்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே, வடக்கு, கிழக்கு மக்களுடான மீளிணக்க விடயங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளை மையப்படுத்தாது அரசு நேரடியாகத் தமிழ் மக்களுடனான ஊடாட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமையும் பின்னர் அது நிர்மாணிக்கப்பட்டமையும் அரசின் மாறுபட்ட நிலையை வெளிப்படுத்தியுள்ளது. அதுபோன்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உட்பட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்வதற்காக நீதிபதி தலைமையிலான மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரசமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும். இத்தகைய விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஜெனிவா வதிவிடப் பிரதிநிதி ஊடாக உரிய பிரசாரங்களை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
அதேநேரம், இலங்கை சார்பில் இம்முறை பிரிட்டன், கனடா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளே பிரேரணையைக் கொண்டுவரவுள்ளன. அந்த நாடுகளிடத்தில் மேற்படி விடயங்களை வெளிப்படையாக கலந்துரையாடுவதன் ஊடாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முடியும்.
அவ்விதமான முயற்சிகளுக்கு அப்பால், உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் மேற்படி விடயங்களை மையப்படுத்தி இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பிரேரணையொன்றைக் கொண்டுவர முடியும்.
சீனா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் இணை அனுசரணை நாடுகள் அல்லாத மேற்குலக நாடுகள் ஆகியவற்றின் ஆதரவைக் கோர முடியும். விசேடமாக காஷ்மீர் பிரச்சினையில் நெருக்கடியில் இருக்கும் இந்தியாவின் ஆதரவையும் இலங்கை கோர முடியும். இந்தியாவின் ஆதரவைப் பெறுவதால் கணிசமான மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன” என்றார்.