துறைமுகத்தின் கிழக்கு முனையம் துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்குமாம். மஹிந்த உறுதி

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்குமாம்.
வெளிநாடுகளிடம் கையளிக்கமாட்டோம் என்று மஹிந்த உறுதி நாளை முதல் கைவிடப்படுகின்றது. சட்டப்படி வேலை போராட்டம்.
“அரசின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கக் கூடாது என்ற கொள்கைகளுக்கமைய கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிடமும் கையளிக்கமாட்டோம்.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச துறைமுகத் தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்தார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூறு வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பட்டிலேயே இருக்கும் என்றும் அவர் மேலும் வாக்குறுதியளித்தார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிநாட்டுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது எனத் தெரிவித்து கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில், அலரி மாளிகையில் இன்று காலை கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் பிரதமருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, உள்ளூர் வளங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்கும் தற்போதைய அரசின் கொள்கையின் கீழ் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுப்பாடு வழங்கப்படவோ மாட்டாது எனப் பிரதமர் குறிப்பிட்டார். அது 100 வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படும் நிறுவனமாகத் தொடர்ந்தும் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன இன்று பிற்பகல் அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் எனவும், இதனால் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்தக் கருத்துக்களுக்கு கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினர் உடன்பாடு தெரிவித்தனர். அதற்கமைய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நாளை முதல் கைவிடுவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
எனினும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் அந்நியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பதை உறுதியளித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை வழங்குமாறு குறித்த கலந்துரையாடலின்போது தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதமரிடம் கோரினர்.
ஆனால், தனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலவற்றைத் தாம் தீர்த்துள்ள போதிலும், அது குறித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை இதுவரை வழங்கியதில்லை என்றும், தாம் வாக்குறுதியளித்தால் அது அவ்வாறே நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
“பிரதமர் என்ற வகையில் நான் முன்னெடுக்கும் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படாது அவை செயற்படுத்தப்படும்” என்றும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.