பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் நிவாஸ்(73) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதியவார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ ஆகிய பாரதிராஜாவின் முக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் நிவாஸ்.
இவரது ஒளிப்பதிவில் ‘கோழி கூவுது’, ‘மை டியர் லிசா’, ‘சலங்கை ஒலி’ உள்ளிட்ட படங்களும் தனி முத்திரை பதித்தவை. இவர், தமிழில் பாரதிராஜா நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தை இயக்கியுள்ளார்.
தேசிய விருது பெற்றவர்
கேரளாவைச் சேர்ந்த நிவாஸ், சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். இவரது ஒளிப்பதிவில் கடைசிப்படமாக தமிழில் ‘செவ்வந்தி’ வெளியானது. சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருது பெற்ற நிவாஸ் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, பின் கேரளா கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.
பாரதிராஜா இரங்கல்
பி.எஸ். நிவாஸின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “என் திரைப் பயணமான ‘16 வயதினிலே’ முதல் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களுக்கு துணைநின்ற பெரும் படைப்பாளி, இந்திய திரை உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர், என் நண்பன் நிவாஸ் மறைவுசெய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.