மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்த தீர்மானம்! டக்ளஸ் கோரிக்கை.
மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்த தீர்மானம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் மீளகுடியேற்றம் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு சொந்தமான காணிகளில் மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் மீள்குடியேற்றப்படாத மக்கள் எதிர்கொண்டு வருகின்ற இன்னல்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
கடற்றொழில் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதில் எந்தவிதமான ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்ததுடன், குறித்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.