மேற்கிந்தியதீவுகள் மீள்வருகையை இலக்கு வைக்கும் பிடல் எட்வேர்ட்ஸ்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு விளையாடத் தயாராகியுள்ள அவ்வணியின் வேகப்பந்துவீச்சாளரான பிடல் எட்வேர்ட்ஸ், ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப எதிர்பார்த்துள்ளார்.
39 வயதாகும் பிடல் எட்வேர்ட்ஸ், இறுதியாக 2012ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடியிருந்தார். எனினும், உடற்றகுதியுடன் இருப்பதால் இவ்வாண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட எதிர்பார்த்துள்ளார்.
இது தவிர, இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்குக்கும் (ஐ.பி.எல்) மீண்டும் திரும்ப முடியுமென பிடல் எட்வேர்ட்ஸ் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார். இறுதியாக 2009ஆம் ஆண்டே ஐ.பி.எல்லில் பிடல் எட்வேர்ட்ஸ் விளையாடியிருந்தார்.
பிடல் எட்வேர்ட்ஸைப் போன்றோருக்கு மீள்வருகை கடினமென்கின்றபோதும், பவர்பிளே, இனிங்ஸின் இறுதிப் பகுதியில் பிடல் எட்வேர்ட்ஸ் பந்துவீசக்கூடியவரென்பதுடன், இன்னும் மிக வேகமாகப் பந்துவீசக்கூடியவராகக் காணப்படுகின்றார்.
இதேவேளை, 50 ஓவர்கள் கொண்ட போட்டிகள், முதற்தரப் போட்டிகளுக்குத் திரும்பும் நோக்கத்தை பிடல் எட்வேர்வேர்ட்ஸ் கைவிடவில்லை.