பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி தடைகளைத் தாண்டி முன்னெடுப்பு
தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்நிறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஆரம்பமானது.
இந்த போராட்டத்தை யாழ்ப்பாணம் – பொலிகண்டியில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
பொத்துவில் நகரில் பேரணி ஆரம்பமானபோது, நீதிமன்ற உத்தரவு குறித்து பொலிஸார் அறிவுறுத்தினர்.
எவ்வாறாயினும், பாதுகாப்புத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், பல இடங்களில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி பேரணியைத் தடுக்க முயற்சித்த போதிலும், பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தை பேரணி சென்றடைந்ததுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கல்முனை நகரிலும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் முதல் நாள் பேரணி மட்டக்களப்பு – தாழங்குடாவில் நிறைவு செய்யப்பட்டதுடன், நாளை திருகோணமலை மாவட்டத்தை நோக்கி பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.