கோட்டா, மஹிந்த, தினேஷை திடீரென சந்தித்துப் பேசினார் இந்தியத் தூதுவர்.

கோட்டா, மஹிந்த, தினேஷை திடீரென
சந்தித்துப் பேசினார் இந்தியத் தூதுவர்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய இலங்கை அரசு முடிவு செய்த ஒருநாள் கழித்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என ‘த ஹிந்து’ இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முழுக்கச் சொந்தமான கொள்கலன் முனையமாக கிழக்கு கொள்கலன் முனையத்தை இயக்க அமைச்சரவை நேற்றுமுன்தினம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
கிழக்கு கொள்கலன் முனையத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கங்கத்தினர் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அதன் செயற்பாட்டை 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்திருக்க அவர்கள் அரசை வலியுறுத்தியிருந்தனர்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் மற்றும் இந்தியாவுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தனது நிலைப்பாடு என இந்தியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.