சிங்கள பெளத்த இராஜ்ஜியமே கோட்டாவின் பிரதான இலக்கு!

சிங்கள பெளத்த இராஜ்ஜியமே
கோட்டாவின் பிரதான இலக்கு!

கெளதம புத்தரையும் துணைக்கு
அழைத்துள்ளார் என மனோ சாடல்

“இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான், இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்ஜியத்தையே கட்டியெழுப்பப் புறப்பட்டுள்ளார் எனத் தெளிவுபடக் கூறிவிட்டார். இதற்காக அவர், கெளதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ஜனாதிபதி கோட்டாபயவின் இன்றைய சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தைக் கேட்டுப் பார்த்தால் இது தெளிவாகப் புரிகின்றது. தேடிப் பார்த்ததில் அவரது சிந்தனையில் உள்ள நான்கு முத்தான விடயங்களைத் தனது உரையில் அவர் உதிர்த்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

நாம் பல இன, மொழி, மத மக்கள் சகவாழ்வு வாழும் சுபீட்சமான இலங்கை இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்ப முயல்கின்றோம். ஜனாதிபதி, தான் இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்ஜியத்தையே தான் கட்டியெழுப்பப் புறப்பட்டுள்ளார் எனத் தெளிவுபடக் கூறிவிட்டார்.

உண்மையில் தனது இலக்கை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக, உள்ளதை உள்ளபடி கூறியமையையிட்டு நான் ஜனாதிபதியைப் பாராட்டுகின்றேன். அவரது இலக்கை நாம் ஏற்க மறுக்கின்றோம் என்பது வேறு விடயம். ஆனால், அவர் ஒளிந்து விளையாடவில்லை அல்லவா?

உலகத்துக்கு ஜனாதிபதி ஏதோ சொல்ல வருகின்றார். அது என்ன எனக் குழப்பிக்கொள்ள வேண்டாம். அவர் பின்வரும் நான்கு கருத்துகளைத்தான் தெளிவாகக் கூறுகின்றார்.

முதலாவது நீங்கள் தேடிய தலைவன் நான்தான். இரண்டாவது நான் ஒரு சிங்கள பெளத்த தலைவன். இதைச் சொல்ல நான் ஒருபோதும் தயங்கப் போவதில்லை. மூன்றாவது பெளத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன். நான்காவது நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும், சுதந்திரமும், சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பெளத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.